மெக்கே: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 431 ரன்கள் குவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் டிராவிஸ் ஹெட், கேப்டன் மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன் என மூவரும் சதம் விளாசினர்.
குயின்ஸ்லாந்தின் மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரையும் வென்றுள்ளது. இந்த சூழலில் மூன்றாவது போட்டி இன்று (ஆக.24) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 250 ரன்கள் சேர்த்தனர். ஹெட், 103 பந்துகளில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் மார்ஷ் 106 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் கண்ட கேமரூன் கிரீன், 55 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் கேரி, 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 431 ரன்கள் எடுத்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன்களில் இந்த 431 ரன்கள் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கடந்த 2006-ல் இதே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 434 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருந்தது. 18 சிக்ஸர்களை ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் விளாசி இருந்தது. அதில் 8 சிக்ஸர்களை கிரீன் விளாசினார்.
432 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க விரட்டி வருகிறது. 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து அந்த அணி தடுமாறி வருகிறது.