சண்டிகர்: பஞ்சாபின் மண்டியாலா பகுதியில் எல்பிஜி டேங்கர் லாரி ஒன்று, மற்றொரு லாரி மீது மோதியதில் டேங்கர் வெடித்ததால் 7 பேர் உயிரிழந்தனர், 15 பேர் படுகாயமடைந்தனர்.
பஞ்சாபின் ஹோசியார்பூர் – ஜலந்தர் சாலையில் சென்று கொண்டிருந்த எல்பிஜி டேங்கர் லாரி ஒன்று மாண்டியாலா அருகே வளைவு ஒன்றில் திரும்பியது. அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி மீது டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில், எல்பிஜி டேங்கர் வெடித்ததில், சம்பவ இடத்தில் இருந்த 7 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். 15 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.
டேங்கர் லாரி ஓட்டுநர் சுக்ஜீத் சிங், பல்வந்த் ராய், தர்மேந்தர் வர்மா, மன்ஜித் சிங், விஜய், ஜஸ்விந்தர் கவுர், ஆராத்னா வர்மா ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. 28 வயதான ஆராத்னா வர்மா, அமிர்தசரஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
பல்வந்த் சிங், ஹர்பன்ஸ் லால், அமர்ஜீத் கவுர், சுக்ஜீத் கவுர், ஜோதி, சுமன், குர்முக் சிங், ஹர்பிரீத் கவுர், குசுமா, பகவான் தாஸ், லாலி வர்மா, சீதா, அஜய், சஞ்சய், ராகவ், பூஜா ஆகியோர் காயமடைந்த நிலையில் அவர்களில் சிலர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த விபத்தை அடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். உரிய இழப்பீடு வழங்கவும் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை உயரதிகாரி குர்சிம்ரஞ்சீத் கவுர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங், “விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும், சேதமடைந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.