ரூ. 2.53 கோடியில் பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற ஆர்விஎன்என் நிறுவனம் ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மண்டபம் நிலப்பரப்பரையும் ராமேசுவரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலமும், இந்திராகாந்தி சாலைப் பாலமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் 1988-ல் சாலைப் பாலம் அமைப்பதற்கு முன்பு 1914-ல் பாம்பன் ரயில் பாலம் (செஷர்ஸ் பாலம்) திறக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. நாட்டில் கடலின் நடுவே அமைக்கப்பட்ட முதல் பாலமாகும். இந்தப் பாலத்தில் கப்பல்கள் செல்வதற்காக நடுவில் தண்டவாளங்களுக்கு இடையே தூக்குப் பாலம் அமைக்கப்பட்டிருந்ததே இதன் சிறப்பாகும்.
நூறாண்டுகளை கடந்த இந்தப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், 2019-ல் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புதிய தொழில்நுட்பத்தில் செங்குத்து புதிய பாலம் கட்டும் பணி 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழைய பாம்பன் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) என்ற ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசு நிறுவனம் பழைய பாம்பன் பாலத்தை அகற்ற ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் 2.3 கி.மீ நீளம் கொண்ட இப்பாலத்தில் நடுவில் உள்ள தூக்குப்பாலம் மற்றும் கர்டர் பாலம், தண்டவாளங்களை ரூ. 2.53 கோடியில் அகற்ற இ-ஒப்பந்தம் கோரியுள்ளது. வரும் செப்.9-ம் தேதி காலை 11 மணி வரை ஒப்பந்தம் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 110 ஆண்டுகள் கடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பாம்பன் ரயில் பாலத்தை, ரயில் அருங்காட்சியத்தில் வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.