ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த தகவல் ஓஎன்ஜிசி இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கை அடிப்படையில், ஓஎன்ஜிசி நிறுவனம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி 1403.41 சதுர கிலோமீட்டர் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.
அதன்படி, எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின் முதல் கட்டமாக, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம், பூக்குளம், சடயநேரி, கீழச்சிறுபோது, வல்லக்குளம், பனையடிஏந்தல், காடம்பாடி, நல்லிருக்கை, அரியக்குடி, காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஆழமலந்தல், சீனங்குடி அழகர்தேவன் கோட்டை, அடந்தனார் கோட்டை, ஏ.மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 20 சோதனை ஹைட்ரோ கார்பன் கிணறுகளை ரூ.675 கோடி செலவு செய்து தோண்ட திட்டமிட்டது.
இந்த கிணறுகளை தோண்ட அனுமதி கோரி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 2023 அக்டோபரில் விண்ணப்பித்திருந்து.
மனுவை ஆய்வு செய்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், 20 இடங்களில் சோதனை கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.