24 ஆகஸ்ட் 1971-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி ரே இல்லிங்வொர்த் தலைமை இங்கிலாந்துக்கு எதிராக தன் முதல் டெஸ்ட் வெற்றியை ஈட்டிய வரலாற்று தினமாகும். இன்றும் இந்த நாள் இந்திய டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தினமாக இருந்து வருகிறது.
அப்போதைய இங்கிலாந்து அணி: பிரையன் லக்ஹர்ஸ்ட், ஜான் ஜேம்ஸன், ஜான் எட்ரிச், கீத் பிளெச்சர், பாசில் டி ஓலிவைரா, ஆலன் நாட் (விக்கெட் கீப்பர்), ரே இல்லிங்வொர்த் (கேப்டன்), ரிச்சர்ட் ஹட்டன், ஜான் ஸ்னோ, டெரிக் அண்டர்வுட், ஜான் பிரைஸ்.
அப்போதைய இந்திய அணி: சுனில் கவாஸ்கர், அசோக் மன்காட், அஜித் வடேகர் (கேப்டன்), திலிப் சர்தேசாய், குண்டப்பா விஸ்வநாத், ஏக்நாத் சோல்கர், ஃபரூக் இஞ்ஜினியர் (விக்கெட் கீப்பர்), சையத் அபிடலி, வெங்கட்ராகவன், பிஷன் சிங் பேடி, சந்திரசேகர்.
டாஸ் வென்ற ரே இல்லிங்வொர்த் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். முதல் நாளிலேயே இங்கிலாந்து 355 ரன்கள் எடுத்தது. ஜான் ஜேம்சன் 82, ஜான் எட்ரிச் 41, ஆலன் நாட் 90, ரிச்சட் ஹட்டன் 81. இந்தியத் தரப்பில் ஏக்நாத் சோல்கர் 3 விக்கெட்டுகளையும் பிஷன் பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
2ம் நாள் ஆட்டம் இல்லை. 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 234/7 என்று இருந்தது. சுனில் கவாஸ்கர் 6, அசோக் மன்கட் 10 என்று சொதப்ப, வடேகர் 48, சர்தேசாய் 54, சோல்கர் 44, ஃபரூக் இஞ்ஜினியர் 59 என்று ஓரளவுக்குத் தேற்றி கொண்டு வந்தனர். மறுநாள் அபிட் அலி 26, வெங்கட் ராகவன் 24 என்று பங்களிப்பு செய்ய இந்திய அணி 284 ரன்களுக்கும் மேல் செல்ல முடியவில்லை. இங்கிலாந்து 71 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ரே இல்லிங்வொர்த் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள். 23ம் தேதி இங்கிலாந்து எதிர்பார்க்காத வகையில் பெரிய சரிவைச் சந்தித்தது. சற்றும் எதிர்பாரா சரிவை முடுக்கி விட்டவர் லெக் ஸ்பின்னர் பகவத் சந்திரசேகர். அவரதுபந்துகள் எப்போது லெக் ஸ்பின் ஆகும் எப்போது கூக்ளி ஆகும் என்பது அவரே அறியாதது. அப்போதைய ஒருவிதமான புதிர் பவுலர் சந்திரசேகர் என்று கூறலாம். இவர் மட்டும் ரிதம் கிடைத்து வீசினால் எந்த அணியின் பெரிய வீரரும் நிற்க முடியாது.
23ம் தேதி அத்தகைய தினமாக சந்திரசேகருக்கு அமைய, 18.1 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் 38 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தை அதிர்ச்சியடையச் செய்தார். இங்கிலாந்து 101 ரன்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸ் 71 ரன்கள் முன்னிலையையும் சேர்த்து இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 173 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 23ம் தேதி கவாஸ்கர் ஸ்னோ பந்தில் எல்.பி முறையில் டக் அவுட் ஆகி கடும் ஏமாற்றமளித்தார்.
அசோக் மன்காடும் 11 ரன்களில் இடது கை ஸ்பின்னர் அண்டர்வுட்டிடம் வெளியேற இந்திய அணி 37/2 என்று ஆனது. பிறகு அஜித் வடேகர், சர்தேசாய் மீண்டும் சேர்ந்து அந்த நாளில் மேலும் சேதம் ஏற்படாமல் முடிக்க 76/2 என்று இந்தியா முடித்தது.
மறுநாள் சமீபத்தில் முடிந்த ஓவல் டெஸ்ட் போலவே திக் திக் இறுதி நாள் ஆட்டம். கடைசி நாளில் வந்தவுடனேயே 45 ரன்களில் கேப்டன் வடேகர் ரன் அவுட் ஆக இந்தியா 76/3. ஆனால் குண்டப்பா விஸ்வநாத் (33), திலிப் சர்தேசாய் (40) சேர்ந்து போராடி ஸ்கோரை 124 ரன்கள் வரை கொண்டு வந்தபோது சர்தேசாய் 40 ரன்களில் வெளியேறினார். பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக ஏக்நாத் சோல்கரும் வந்தவுடனேயே 1 ரன்னில் அண்டர்வுட் பந்தில் வெளியேற 134/5 என்று ஆனது இந்திய அணி. பிறகு பரூக் இஞ்ஜினியர் இறங்கி 28 ரன்களை விளாச இந்திய அணி விஸ்வநாத் விக்கெட்டை இழந்தாலும் அபிட் அலி உதவியுடன் வரலாறு படைத்தது. 174/6 என்று வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது.
கடைசி 97 ரன்களை எடுக்க இந்திய அணிக்கு 3 மணி நேரம் ஆகிவிட்டது என்றால் இங்கிலாந்து எப்படி இந்திய அணியின் வெற்றியை கடினமாக்கியது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 1-0 என்று தொடரை வென்றதோடு 26 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுறாமல் அதுவரை இருந்த இங்கிலாந்தின் வெற்றிக்கதையை சிறப்பாக முடித்து வைத்தது இந்திய அணி.