‘பிக் பாஸ்’ ராஜு ஜெயமோகன் நடித்த ‘பன் பட்டர் ஜாம்’ படத்தைத் தயாரித்தவர், அமெரிக்காவில் வசித்து வரும் சுரேஷ் சுப்பிரமணியன். அவர் ஹாலிவுட்டிலும் படம் தயாரிக்கிறார்.
சென்னை வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதலில், ‘எண்ணித் துணிக’ என்ற படத்தைத் தயாரித்தேன். அடுத்து, ‘பன் பட்டர் ஜாம்’. எனக்கு புராணம், இதிகாசம், சயின்ஸ் பிக்ஷன் மற்றும் ஃபேன்டஸி கதைகள் அதிகம் பிடிக்கும். இப்போது மக்களும் இது போன்ற படங்களை விரும்புகிறார்கள்.
முன்னதாக, திருவண்ணாமலைப் பின்னணியில் ஆன்மிக த்ரில்லர் மற்றும் இன்னொரு கதை பற்றி பேசியிருந்தோம். இப்போது அவற்றைப் படமாக்கும் முயற்சியில் இருக்கிறோம். திருவண்ணாமலைப் பின்னணி கதையில் பிரபலமான நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம்.
இன்னொரு பக்கம் ‘ஷார்க்கி’ என்ற படத்தை ஹாலிவுட்டில் தயாரிக்கிறேன். இப்போது முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று கதாபாத்திரங்களை மையப்படுத்திய ஆந்தாலஜி கதை போல இது இருக்கும். இதில் சிறையில் இருக்கும் கைதியாக நான் நடிக்க இருக்கிறேன். நானே இயக்கவும் திட்டமிட்டுள்ளேன்” என்றார்.