சந்திரயான்-3 திட்டம் மூலம் கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்தது. இதை நினைவுகூரும் விதமாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய விண்வெளி தினவிழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது, “இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதை தொடர்ந்து, அடுத்து வரும் ஆண்டுகளில் இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன்) கட்டப்படும்” என்றார் பிரதமர்.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஐப்பான், கனடா ஆகியவை இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா, இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்தார்.
கடந்த 2022-ம் ஆண்டில் சீனாவின் சார்பில் ‘டியான்காங்’ விண்வெளி நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. அந்த நிலையத்தில் சீன விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா சார்பில் வரும் 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையத்தை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, கடந்த ஜனவரியில் இஸ்ரோ சார்பில் விண்வெளியில் 2 செயற்கைக் கோள்கள் ‘டாக்கிங்’ தொழில்நுட்பம் மூலமாக வெற்றிகரமாக இணைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
பூமியில் இருந்து 450 கி.மீ. தொலைவில் இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன்) கட்டப்பட உள்ளது. இதற்கான முதல் தொகுப்பு (பிஏஎஸ்1) வரும் 2028-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அடுத்தடுத்து 4 தொகுப்புகள் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.
இந்த 5 தொகுப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு வரும் 2035 முதல் இந்திய விண்வெளி நிலையம் செயல்படத் தொடங்கும். இந்த சூழலில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய விண்வெளி நிலையத்தின் மாதிரி அறிமுகம் செய்யப்பட்டது. இதை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.