கொச்சி: நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் நவம்பர் மாதம் பிஃபாவின் நட்புரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவுக்கு வருகை தருகிறது. இதை அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போட்டி நவம்பர் 10 – 18ம் தேதிகளுக்கு இடையில் கொச்சி அல்லது திருவனந்தபுரத்தில் நடைபெறக்கூடும்.
அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் தனது எக்ஸ் வலைதள பதிவில், “லயோனல் ஸ்கலோனியின் பயிற்சியின் கீழ் உள்ள அர்ஜெண்டினா தேசிய அணி இந்த ஆண்டில் எஞ்சியுள்ள 2 பிஃபா நட்புரீதியிலான போட்டிகளில் விளையாடும். இதில் முதல் போட்டி வரும் அக்டோபர் 6 முதல் 14 ம் தேதி வரை, அமெரிக்காவில் நடைபெறும் 2-வது போட்டி நவம்பர் 10 முதல் 18 வரை அங்கோலாவின் லுவாண்டா மற்றும் இந்தியாவின் கேரளாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள விளையாட்டு அமைச்சர் அப்துர்ரஹ்மான் கூறும்போது, “கேப்டன் லயோனல் மெஸ்ஸி உள்ளிட்ட உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா கால்பந்து அணியினர் வரும் நவம்பர் மாதம் கேரளாவுக்கு வருகை தருகின்றனர்.
வரும் நவம்பர் மாதம் கேரளாவில் விளையாடும் என்று அர்ஜெண்டினா தேசிய கால்பந்து அணி அறிவித்துள்ளது. லயோனல் மெஸ்ஸி தலைமையில் உலகக் கோப்பையை வென்ற முழு அணியும் கேரளாவில் விளையாடும். இதற்காக அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது கேரள கால்பந்து மற்றும் முழு விளையாட்டுத் துறைக்கும் உண்மையிலேயே ஒரு வரலாற்று தருணம்” என்றார்.
இருப்பினும், அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்தின் எக்ஸ் வலைதள பதிவில், லயோனல் மெஸ்ஸியைப் பற்றியோ அல்லது தேசிய அணியின் விவரங்களை பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் கேரளாவில் நடைபெறும் போட்டியில் எதிரணி எது என்பதும் முடிவு செய்யப்படவில்லை. இந்த ஆட்டம் பிஃபாவின் நட்புரீதியிலான போட்டி என்பதால் சர்வதேச அணியுடனே அர்ஜெண்டினா மோதக்கூடும்.
முன்னதாக, அர்ஜெண்டினா அணியின் கேரளா மாநில வருகை சந்தேகத்திற்குரியதாக இருந்தது. ஏனெனில் அந்த நாட்டின் கால்பந்து சங்கம் கேரள சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தவறியதற்கு கேரள அரசு அதிகாரிகள் மீது பழி சுமத்தியது அர்ஜெண்டினா கால்பந்து சங்கம்.
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியை கேரளாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர்ரஹ்மான் ஸ்பெயினுக்குச் சென்று அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்தின் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளா வருகை தந்து போட்டிகளில் விளையாடும் என அப்துர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
ஆனால், அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்தின் தலைமை வணிக பிரிவு அதிகாரியான லியாண்ட்ரோ பீட்டர்சன் கடந்த 8-ம் தேதி அன்று உலக சாம்பியன்களின் கேரளா வருகை உறுதிப்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார். இதனால் அப்துர் ரஹ்மான் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் அப்துர் ரஹ்மானின் ஸ்பெயின் சுற்றுப்பயணத்துக்காக ரூ.13 லட்சம் செலவிடப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடைசியாக அர்ஜெண்டினா அணி கடந்த 2011-ம் ஆண்டு கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் வெனிசுலாவுடன் மோதியிருந்தது. இதில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.