பாட்னா: லஞ்சம் வாங்கி ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்த பிஹார் இன்ஜினீயர் வீட்டில் சோதனை நடத்த வந்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், ரூ.3 கோடி பணத்தை எரித்து அழித்ததை கண்டு திடுக்கிட்டனர்.
பிஹார் மாநிலத்தில் ஊரக பணிகள் துறையில் இன்ஜினீயராக பணியாற்றுபவர் வினோத் ராய். மதுபானி, சீதா மார்ஹி ஆகிய இரு மாவட்டங்களில் நடைபெறும் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுமானத்தை இவர்தான் கவனித்து வந்தார். ஒப்பந்தகாரர்களிடம் இருந்து அதிகளவில் லஞ்சம் வாங்குவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டில் சோதனை செய்ய பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இத்தகவலை முன்கூட்டியே அறிந்த வினோத் ராய், வீட்டில் இருக்கும் லஞ்ச பணத்தை அழிக்க முடிவு செய்தார். அதனால் அவரும், அவரது மனைவி பப்லி ராயும் சேர்ந்து இரவு முழுவதும் ரூபாய் நோட்டுகளை எரித்து சாம்பலாக்கி, கழிவு நீர் குழாய் வழியாக ஊற்றியுள்ளனர். ஒரு கட்டத்தில் கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு விட்டது. அவர்களால் மேலும் பணத்தை எரிக்க முடியவில்லை. அதற்குள் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வினோத் ராய் வீட்டுக்குள் புகுந்து சோதனையை தொடங்கினர்.
எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் கழிவு நீர் குழாய்களில் சிக்கியிருந்ததை அவர்கள் கண்டு திடுக்கிட்டனர். ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை அவர்கள் எரித்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில் பாதி எரிந்த நிலையில் ரூ.20 லட்சம் பணமும், ரூ.40 லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ.100 கோடி மதிப்பில் 18 சொத்து ஆவணங்கள், ரூ.6 லட்சம் மதிப்பிலான ஆடம்பர கைக்கடிகாரங்கள், 15 வங்கி கணக்கு புத்தகங்கள், வினோத் ராய் பெயரில் காப்பீடு பாலிசிகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தவுள்ளது. பணம் எரிக்கப்பட்டதால், தடயவியல் துறையினரின் உதவி நாடப்பட்டுள்ளது. வினோத் ராயின் மனைவி பப்லி ராய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பிஹார் மாநிலத்தின் அரசுத் துறையில் லஞ்சம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளதை வெளிக்காட்டியுள்ளது. அரசு அதிகாரிகள் பலர், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மிக விரைவில் கோடீஸ்வரர்களாகி விடுகின்றனர். இந்த விவகாரம் ஊழலற்ற ஆட்சி என கூறிவரும் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.