மூலவர்: கோணேஸ்வரர் அம்பாள்: பெரியநாயகி தலவரலாறு: பிரம்மா, வேதங்களை ஓர் அமுதக்குடத்தில் வைத்தபோது வெள்ளப் பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. அப்போது சிவன், வேடன் வடிவில் சென்று குடத்தின் மீது அம்பு எய்தி, மீண்டும் உயிர்களைப் படைத்தார். அமுதக்குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். குடத்தின் வாய் பாகம் இப்பகுதியில் (குடவாசல் / குடவாயில்) விழுந்தது. காலவெள்ளத்தில் இந்த லிங்கம் புற்றால் மூடப்பட்டது.
பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை. சத்ரு என்பவளின் அடிமையாக இருந்தாள். தாயை மீட்க, கருடன் தேவலோகம் சென்று அமுதக்குடம் எடுத்து வந்தார். வழியில் இத்தலத்தில் இறங்கினார். அப்போது அசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து குடத்தை பறிக்க முயன்றான். கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு. போரிட்டார். அவனை வென்று குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள் புதைந்திருந்தது.
எனவே தனது அலகால் கீறவே, அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்து, கருடனின் தாயை மீட்டு அருளினார். அதன்பின்பு கருடனே இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார். கோயில் சிறப்பு: உயிர்களை (கோ) நேசித்து, அவர்களை மீண்டும் படைக்க அருளியவர் என்பதால் ஈசனுக்கு ‘கோணேஸ்வரர்’ என்று பெயர் ஏற்பட்டது. கோணேஸ்வரர் சதுர பீடத்துடன், சுயம்புமூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
பெரியநாயகி அம்பாள் (பெரிய துர்கை, பிருஹத் துர்காம்பிகை) தனிச்சந்நிதியில் துர்கை அம்சத்துடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 157-வது தேவாரத் தலம் ஆகும். புத்திர தோஷம் நீங்க இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
அமைவிடம் : திருவாரூர் – கும்பகோணம் சாலையில் 23 கிமீ தொலைவில் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-12, மாலை 4-9 மணி வரை.