சென்னை: அமித் ஷா 1000 முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நெல்லையில் நேற்று முன்தினம் பாஜக கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசை அகற்றுவோம் என்றும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அதிகார மமதையுடன் பேசியிருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டுமென்று கூறும் அமித் ஷா, அதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமி பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. அதிமுக தலைமையோ,உள்துறை அமைச்சரின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு, அமலாக்கத் துறை, வருமான வரித்துறைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பொருந்தாக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இத்தகைய சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்.
திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளதாக அமித் ஷா கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக எந்த வழக்கும், எந்த நீதிமன்றத்திலும் நிலுவையில் இல்லை. ஆனால், 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரபேல் விமான ஊழல், தேர்தல் நன்கொடை பத்திர மோசடி என பல மோசடிகள் நடந்துள்ளன.
தேர்தல் ஆணையம் மூலம் வாக்குகளை திருடி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் அவதூறு கட்டுக்கதைகளை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை. தமிழ் மொழிக்காக பரிந்து பேசும் அமித் ஷா, அதற்காக ரூ.20 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கினார். எனவே, அவரது பேச்சை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அமித் ஷா ஆயிரம் முறை வந்தாலும், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது.