சேலம்: சேலத்தில் செய்தியாளர்களிடம் பெங்களூரு புகழேந்தி நேற்று கூறியதாவது: தமிழகத்தில் அண்ணாமலைக்கு தனி செல்வாக்கு இருந்தது. ஆனால், தற்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்று அவர் பேசுகிறார். ஏன் இப்படித் தடுமாறிவிட்டார் என்று தெரியவில்லை.
வடக்கில் இருந்து 100 தலைவர்கள் தமிழகம் வந்தாலும், இங்கு ஆட்சி அமைக்க முடியாது. விஜய் மாநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடியிருந்தனர். இதை யாராலும் மறுக்க முடியாது. எங்களுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி என்று திமுக அமைச்சர் ஒருவர்கூறுகிறார். ஆனால், தற்போது சீமானுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி. அதேபோல, வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி.
வெளியில் வராமல் அரசியல் செய்ய முடியாது. விஜய்க்கு என்ன தெரியும் என்று கேட்கிறார்கள்? கட்சி தொடங்கிய 7 மாதங்களில் என்டிஆர் ஆட்சி அமைத்தார். அரசியலில் எதுவும் நடக்கும்.