தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளியம்மனும் தனித்தனி வாகனங்களில் வீதியுலா சென்றனர்.
விழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றன. வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சுவாமி குமரவிடங்க பெருமான் தேரில் எழுந்தருளினார்.
காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்தது. பின்னர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் ரதவீதிகள் சுற்றி வந்த பின்னர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து, வள்ளியம்மன் மட்டும் வீற்றிருந்த தேர் புறப்பட்டு ரதவீதிகளை வலம் வந்து, மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது.
தூத்துக்குடி மாவட்ட நீதிபதி வஷித்குமார், அறநிலையத் துறை இணை ஆணையர் ஞானசேகரன், ஓய்வுபெற்ற கால்நடைத் துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.