விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவரான அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, மங்கல இசை ஒலிக்க, வடக்கு வாசல் வழியாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது அங்காளம்மனை போற்றி கோயில் பூசாரிகள் தாலாட்டுப் பாடல்களை பாடினர். அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஊஞ்சல் மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். நள்ளிரவு ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றதும், கோயிலுக்கு உற்சவர் அங்காளம்மன் கொண்டு செல்லப்பட்டார்.