சென்னை: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிர்வாக, சட்ட ரீதியாக எண்ணற்ற குறுக்கீடுகள், தடைகளை ஏற்படுத்தி மத்திய பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. மாநிலங்களுக்கு உரிய நியாயமான நிதி பங்கீட்டை வழங்க மறுக்கிறது என்று முதல்வர் ஸ்டாலி்ன் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய – மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தலைமைச் செயலர் முருகானந்தம் வரவேற்றார். மாநில உரிமைகளை பாதுகாத்து, மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான குரியன் ஜோசப் இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வரும் பேசினார்.
மத்திய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவுக்கான பிரத்யேக இணையதளத்தை இந்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: ஐ.நா. சபையின் மானிட மேம்பாட்டு குறியீடுகளான தனிநபர் வருமானம், கல்வி, பொது சுகாதாரம், பெண்ணுரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற குறியீடுகளில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மத்திய அரசின் நேர்முக வரிகளிலும், ஜிஎஸ்டி வரிகளிலும் அதிக வருமானத்தை ஈட்டி கொடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்துக்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படுகிறது. பல்வேறு நெருக்கடிகளையும் மீறி மத்திய அரசுடன் போராடி இந்த அரசு பல பொருளாதார திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி, கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறது.
காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிட்டு, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை அப்போதே கண்டித்தோம். இந்த நிலை தொடரக்கூடாது, மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்ற உணர்வில்தான், நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளோம்.
‘அளவுக்கு மீறிய அதிகாரக் குவியல்களால் மத்திய அரசுக்கு ரத்தக் கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது’ என்று சர்க்காரியா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், அரசமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள உரிய பரிந்துரைகளை அந்த ஆணையம் வழங்கவில்லை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மற்றும் அரசமைப்பு சட்டத் திருத்தங்கள் மூலமாக மத்திய அரசிடம் அதிகாரங்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றன.
மத்தியில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, திமுக வலியுறுத்தலின்பேரில் முன்னாள் தலைமை நீதிபதி புஞ்சி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. நடுநிலையானவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து ஆளுநர்களை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று அந்த ஆணையம் பரிந்துரை செய்தது. அதை இதுவரை மத்திய அரசு ஏற்கவில்லை என்பதை, தற்போதைய ஆளுநரின் செயல்பாடுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு இதுபோல நிர்வாக, சட்ட ரீதியாகஎண்ணற்ற குறுக்கீடுகள், தடைகளை ஏற்படுத்தி மத்திய அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. நிதி ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுவதை மத்திய அரசு தடுக்கிறது. மாநிலங்களுக்கு உரிய நியாயமான நிதி பங்கீட்டை வழங்க மறுக்கிறது. இதையெல்லாம் மீறி, நிதிப் பற்றாக்குறை காலத்திலும் சிறப்பான நிதி மேலாண்மை மூலமாக இந்த அரசு சிறந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதனால், கடந்த 2024-25-ம் ஆண்டில் 11.19 சதவீதம் எனும் இரட்டை இலக்க வளர்ச்சியை, 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் அடைந்துள்ளது.
இந்தியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டியபோதும், பல்வேறு போராட்டங்கள் மூலமாக இந்தி மொழி திணிப்பை தமிழகம் முறியடித்துள்ளது. மாநில உரிமைகளுக்காக மக்கள்மன்றத்திலும், சட்டப்பேரவையிலும் அனைத்துவிதமான ஆக்கப்பூர்வமான, ஜனநாயக நடவடிக்கைகளையும் திமுக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த நிகழ்வில், முன்னாள் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.