‘கூலி’ படத்தில் தனது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனத்துக்கு நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் “கூலி படத்தில் ப்ரீத்தியின் கதாபாத்திரம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதாக காட்டப்பட்டது உங்களுக்கு நியாயமற்றதாக தோன்றவில்லையா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், “அந்த கதாபாத்திரம் துயரத்தில் இருக்கிறது. அது வேறொருவரின் பார்வை. இதில் நியாயம் அல்லது அநியாயம் என்பதெல்லாம் இல்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக ஒரு பேட்டியில், பேசிய அவர், “ப்ரீத்தி கதாபாத்திரம் என்னைப் போன்றதல்ல. அவளுடைய சில அம்சங்களுடன் நான் தொடர்புப் படுத்திக் கொள்கிறேன். பெரும்பாலான பெண்களால் அந்த அம்சங்களுடன் தொடர்புப் படுத்திக் கொள்ளமுடியும் என்று நான் நம்புகிறேன். அந்தக் கதாபாத்திரத்தில் எனக்கு அதுதான் மிகவும் பிடித்திருந்தது. ப்ரீத்தி மிகவும் பொறுப்பானவள், மிகவும் கவனமானவள், மிகவும் ஊக்கமளிக்கும் குணம் கொண்டவள்” என்று கூறியிருந்தார்.
‘கூலி’ படம் வெளியானபோது சமூக வலைதளங்களில் பலரும் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர வடிவமைப்பை கிண்டல் செய்தனர். படம் முழுக்க ஏதோவொரு பிரச்சினையை தேடிச் சென்று சிக்கிக் கொள்பவராக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக பலரும் விமர்சித்தனர்.