திருவனந்தபுரம்: வரும் நவம்பர் மாதம் கேரள மாநிலத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி, நட்பு ரீதியான போட்டியில் விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இதனை அந்த அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அர்ஜெண்டினா அணி உடன் இதில் விளையாட உள்ள மற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் அது குறித்து இந்தப் போட்டியின் ஏற்பாட்டாளரான ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி கூறியுள்ளது.
“கடந்த சில தினங்களுக்கு முன்னர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி இந்தியாவில் விளையாடுவது குறித்த மின்னஞ்சலை நாங்கள் பெற்றோம். இருந்தும் இது குறித்து முதலில் அர்ஜெண்டினா கால்பந்து அணி அறிவித்தால் நன்றாக இருக்கும் என கருதி நாங்கள் அமைதி காத்தோம். அதன்படி அந்த அணி நிர்வாகம் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா உடன் விளையாட ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பிரேசில் உள்ளிட்ட அணிகள் உடன் பேசி வருகிறோம். இதை அடுத்த ஒரு வார காலத்தில் இறுதி செய்து விடுவோம். இந்த பயணத்தில் அர்ஜெண்டினா அணி ரசிகர்களை சந்திக்கவும் உள்ளது. இதற்காக சுமார் 45 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மலப்புரம் அல்லது கோழிக்கோட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த போட்டியை நடத்த சுமார் 400 கோடி ரூபாய் வரை செலவு ஆகும். இரண்டு தேசிய கால்பந்து அணிகள் இதில் விளையாடுகின்றன. அதனால் நிதி விவகாரம் எங்களுக்கு பெரிய சிக்கலாக இருக்காது. அதிக அளவில் எங்களுக்கு ஸ்பான்சர்கள் கிடைத்துள்ளனர்.
அர்ஜெண்டினா அணி உடன் நாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியாவில் அந்த அணி விளையாட வேண்டுமென குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு வருவதாக முதலில் தெரிவித்தது. அதுதான் இந்த ஆட்டம் சார்ந்து சர்ச்சை எழ காரணம். இப்போது அனைத்துக்கும் தீர்வாக வரும் நவம்பரில் அர்ஜெண்டினா அணி இந்தியாவில் விளையாடுகிறது” என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆண்டோ அகஸ்டின் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி நவம்பரில் கேரள மாநிலத்தில் விளையாட உள்ள செய்தி இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.