புதுச்சேரி: புதுச்சேரிக்கு காங்கிரஸால் மட்டும்தான் மாநில அந்தஸ்து பெற முடியும் என்றும், பாஜக – என்.ஆர்.காங்கிரஸால் முடியாது என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்தினால் கிடைக்கும் என பாஜக மாநில தலைவர் கூறியுள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என 10 முறைக்கு மேல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரங்கசாமி தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பெறுவதே லட்சியம் என கூறியுள்ளார். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறப்பு மாநில அந்தஸ்து தருவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம், இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என தெளிவாக கூறிவிட்டனர். மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், பாஜக மாநில தலைவர் முதல்வர் பிரதமரை சந்திக்க வேண்டும் என்கிறார். அப்படியென்றால், சட்டப்பேரவை தீர்மானத்துக்கு என்ன மரியாதை உள்ளது? பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியது என்ன ஆனது? இதிலிருந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என தெளிவாக தெரிகிறது.
புதுச்சேரி என்.ஆர். காஙகிரஸ் – பாஜக ஆட்சியில் கண்டிப்பாக மாநில அந்தஸ்து பெற முடியாது. 2026-ல் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பெறுவோம். பாஜக அரசு தனது சாதனையை வெளியிட்டுள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாநில அந்தஸ்து பெற முடியவில்லை.
பட்ஜெட் போடுவது பற்றி தெரியாமல் காங்கிரஸ் ஆட்சியில் கடன் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். ரங்கசாமி ஆட்சியிலும் கடன் பெற்றுத்தான் பட்ஜெட் போட்டுள்ளார். மத்திய அரசு, ரங்கசாமிக்கு ரூ.1,700 கடன் அளித்துள்ளது. ரங்கசாமி தற்போது ரூ.4,750 கோடி ஆசிய வங்கியில் தற்போது கடன் வாங்குகிறார். விவரம் தெரியாமல் அரசியல் ஞானசூன்யமாக காங்கிரஸ் ஆட்சியை பற்றி குறை கூறுகின்றனர்.
புதிய கல்வி கொள்கையால் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். இந்தியை திணிப்பதால் புதுச்சேரி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புதிய கல்வி கொள்கையால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தால் எந்தச் சுமையும் இல்லை. 2 நாள் முன்பு தனியார் பள்ளி மாணவி சிபிஎஸ்இ பாடத்திட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துள்ளார். இதனால்தான் காங்கிரஸ் ஆட்சியில் இதனை எதிர்த்தோம்.
60 சதவீத பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு போதிய பயிற்சி தரவில்லை. அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடம் கற்றுத்தர திணறுகின்றனர். மத்திய அரசே 10 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றல் செய்துள்ளனர் என கூறியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும்.
புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி அதிமுகவுடன் கூட்டணி பேசவில்லை என கூறியுள்ளார். அதிமுக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரெஸ்டோ பாரில் மாணவர் படுகொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். குடியிருப்பு ரெஸ்டோ பார்களை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே துணைநிலை ஆளுநரை சந்தித்து ரெஸ்டோ பார் மூட வலியுறுத்தியும், மாணவர் படுகொலை குறித்து சிபிஐ விசாரணை கோரியும் மனு அளிக்க உள்ளோம். தேவைப்பட்டால் காங்கிரஸ் சார்பில் நீதிமன்றத்தை நாடுவோம்.
காவல் துறை கட்டபஞ்சாயத்து துறையாகிவிட்டது. பணம் கொடுத்தால்தான் வழக்குப் பதிவு செய்கின்றனர். மாணவர் படுகொலையில் எந்தப் பெண்ணை சீண்டினார்கள் என டிஐஜி தெரிவிக்க வேண்டும். முதல்வருக்கு நெருக்கமானவர்கள்தான் ரெஸ்டோ பார் நடத்துகின்றனர். இதனால் முறையான விசாரணை நடத்தாமல், மூடி மறைக்க பார்க்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.