இந்தூர்: 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதா முற்போக்கானது என்றும், இதை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஊழலை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நடைபெற்ற தாயின் பெயரில் மரம் நடும் விழாவில் பங்கேற்று மரக்கன்றினை நட்ட அர்ஜுன் ராம் மேக்வால், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் அது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
எனது பார்வையில் இது ஒரு சிறந்த, முற்போக்கான சட்டம். எதிர்க்கட்சிகள் இதை ஆதரிக்க வேண்டும். ஆனால், அவர்கள் எதிர்க்கிறார்கள். அப்படியானால், எதிர்க்கட்சிகள் ஊழலுக்கு ஆதரவாக உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றன. அவர்கள், மசோதாவை முழுமையாக படிப்பதில்லை” எனத் தெரிவித்தார்.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்: இந்த மசோதாவின்படி, ஓர் அமைச்சர் ஊழல் அல்லது கடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டாலோ, 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலோ 31-வது நாள் முதல்வரின் பரிந்துரையின் பேரில், அவரை அமைச்சரவையில் இருந்து மாநில ஆளுநர் நீக்க வேண்டும். ஒருவேளை ஆளுநருக்கு பரிந்துரை செய்யவில்லை என்றால், தானாகவே 31-ம் நாளில் அவர் பதவியை இழந்து விடுவார்.
இதேபோல, பிரதமர் அல்லது முதல்வர் தொடர்ந்து 30 நாட்களுக்கு சிறைக் காவலில் இருந்தால், அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், தண்டனைக் காலம் குறைந்தது 5 ஆண்டுகள் என்று இருந்தால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 31-வது நாளில் இருந்து அவர் முதல்வர் பதவியை இழப்பார். காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், பிரதமர், முதல்வர் அல்லது அமைச்சர்களை துணைநிலை ஆளுநர் பதவி நியமனம் செய்யும்போது, அதைத் தடுக்க உட்பிரிவு எதுவும் இதில் இல்லை என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்காக கைது செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த புதிய மசோதா பொருந்தும். இதன் மூலம் கொலை, பெரிய அளவிலான ஊழல் போன்ற கடும் குற்றங்கள் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்பது கவனிக்கத்தக்கது.