சென்னை: புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் 2026-ம் ஆண்டு ஜன.7-ம் தேதி நடைபெறும். அந்த மாநாட்டில், சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்று அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு 2026-ம் ஆண்டில் ஜன.7-ம் தேதி மதுரையில் நடைபெறும்.இந்த மாநாட்டில் வரும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கவின் கொலை குறித்து திருச்சியில் கடந்த மாதம் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆணவப்படுகொலை சம்பவங்களுக்கு அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, வரும் செப்.17-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பாக, புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும். ஆணவப்படுகொலைக்கு சட்டம் இயற்றப்படும் போது, அது போன்ற நிகழ்வுகள் குறையும்.பள்ளி பாடப்புத்தகத்தில் அது குறித்தான பாடங்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
தவெக தலைவர் விஜய் மாநாட்டை நன்றாக நடத்தி இருக்கிறார். அவர் கூறிய அங்கிள் என்ற வார்த்தை ஒன்றும் கெட்டவார்த்தை கிடையாது.ஆட்சியில் பங்கு என்பதை பற்றி விஜய் தொடர்ந்து பேசி வருகிறார். இது வரவேற்கத்தக்கது. விஜய் வருகையை பொருத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் என்ன மாற்றத்தை கொண்டு வரும் என்பதை பார்போம். தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரை பிம்பத்தை வைத்து தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், விஜய்யை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறார்கள்.
தூய்மைப் பணியாளர்களுக்கு நாங்களும் குரல் கொடுத்தோம். மேலும் இன்று மழை நீரில் மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் இறந்துள்ளார்.மழை காலம் என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் அதனை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் கவனமாக இல்லாதால், பாதிக்கப்படுவது சாமனிய மக்கள் தான்.சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
அவர்களை அரசு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளார். பிரதமர், முதல்வர் 30 நாளுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்களை பதவியில் இருந்து நீக்கக்கூடிய சட்ட மசோதாவை எங்களது கட்சி வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்,