புதுடெல்லி: இந்த மாத இறுதியில் அமலுக்கு வரும் அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு காரணமாக, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்தது.
ஜூலை 30 அன்று அமெரிக்க நிர்வாகம் வெளியிட்ட நிர்வாக உத்தரவு எண் 14324-ஐ தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் 800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கான வரி இல்லாத குறைந்தபட்ச விலக்கு ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியா மீது 25 சதவீத வரியையும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு கூடுதலாக 25 சதவீத வரியையும் விதித்தார். இதனால் மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும், அவற்றின் மதிப்பை பொருட்படுத்தாமல், நாடு சார்ந்த சர்வதேச அவசர பொருளாதார சக்திச் சட்டத்தின் (IEEPA) கட்டண கட்டமைப்பின்படி சுங்க வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இருப்பினும், 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு தொடர்ந்து வரிவிலக்கு அளிக்கப்படும்.
புதிய விதிமுறைகளின் காரணமாக ஆகஸ்ட் 25 க்குப் பிறகு சரக்குகளை ஏற்க முடியாது என்று அமெரிக்காவுக்குச் செல்லும் விமான நிறுவனங்கள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளன. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, கடிதங்கள்/ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் தவிர, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது’ என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.