விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த
நிலையில் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளும் சமீப ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியைத் தீவிரப்படுத்தி வரு கின்றன. அந்த வகையில் இஸ்ரோவின் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ இந்திய விண்வெளித் துறையின் சாதனை களுக்கு மற்றுமொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற இந்திய வம்சாவளியினர் விண் வெளிக்குப் பயணித்திருந்தாலும், அவர்கள் இந்தியாவின் பிரதிநிதியாக இல்லாமல், அமெரிக்காவின் சார்பாகவே பயணங்களை மேற்கொண்டனர். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்னும் பெருமைக்குரிய ராகேஷ் சர்மாகூட சோவியத் ஒன்றி யத்தின் ‘சோயுஸ் டி-11’ என்கிற விண் வெளித் திட்டத்தில்தான் அந்தச் சாதனையைப் படைத்தார்.
இஸ்ரோ தற்போது உருவாக்கியுள்ள ககன்யான் விண்கலம், விண்வெளித் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்தி இருக்கிறது. சுமார் ரூ.10,000 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த விண்கலம், முழுக்க முழுக்க இந்திய விண்வெளித் துறையின் முயற்சியால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்துக்கான சோதனைகள் 2014 முதல் நடந்துவருகின்றன. ககன்யான் விண்கலம் மூலம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ.க்கு மேல் உள்ள சுற்றுவட்டப் பாதைக்கு விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவார்கள். அங்கு 1 முதல் 3 நாள்கள் தங்கி ஆய்வுசெய்த பிறகு, பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்புவர். ககன்யான் விண்கலம் மூலம் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது.
இஸ்ரோவின் ககன்யான் விண்கலத் தில் பயணம் செய்ய, பிரசாந்த் பால கிருஷ்ணன், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், ஷுபன்ஷு சுக்லா ஆகிய நான்கு இந்தியர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ரஷ்யா வில் பிப்ரவரி 2020 முதல் மார்ச் 2021 வரை விண்வெளிப் பயணம் தொடர்பான சிறப்புப் பயிற்சியைப் பெற்றனர்.
ககன்யான் விண்கலத்தில் வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ஏராளமான பரிசோதனைகளை இஸ்ரோ தொடர்ச்சியாக நடத்திவருகிறது. அதன்படி, ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி – டி1, 2023 அக்டோபரில் ஹரிகோட்டா விண்வெளித் தளத்தி லிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
ககன்யான் விண்கலத்தின் மூலம் அனுப்பப்படும் விண்வெளி வீரர்களுடன் ‘வாயு மித்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ள ரோபாட்டும் பயணம் செய்ய இருக்கிறது. விண்கலத்தின் எடை, கதிரியக்கம், வெப்பநிலை, இயங்குநிலை ஆகிய வற்றைக் கண்காணிக்கவும், ஆபத்துக் காலத்தில் வீரர்களுக்கு உதவி செய்யும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. ககன்யான் விண்கலத்தின் சிறப்பம்சமாகத் தனிக்கலம் (capsule) ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலத்தில் விண்வெளி வீரர்கள் அமர்ந்திருக்கும் போது, விண்கலத்தில் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், ஒட்டுமொத்த விண்கலத்தி லிருந்து விண்வெளி வீரர்கள் அமர்ந்தி ருக்கும் தனிக்கலம் பிரிந்து வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தனிக்கலம் காற்றுப்பை போன்று செயல்படுவதால் விபத்து நேரும்பட்சத்தில் விண்கலத்திலிருந்து தனியாகப் பிரிந்து வெளியேறும். பின்னர் பாராசூட், பிற மீட்புக் கருவிகள் மூலம் வீரர்கள் பத்திரமாகத் தரையிறங்கலாம்.இந்தத் திட்டம் வெற்றிபெற்றால், விண்வெளிக்கு வீரர்-வீராங்கனை களை அனுப்பப் பெரும் தொகை செலவிட்டு, வெளி நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்படாது.