ஊட்டி: மலைப்பகுதியில் பயிற்சி பெறுவது தடகள வீரர்களுக்கு களத்தில் பயனளிக்கும் என இந்திய தடகள வீராங்கனை மற்றும் தெற்காசிய சாம்பியன் ஷர்வானி சாங்லே தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு அரங்கில் கிரசண்ட் பள்ளி விளையாட்டு விழா இன்று நடந்தது. போட்டிகளை பள்ளி தாளாளர் உமர் பரூக், நகராட்சி துணை தலைவர் ஜே.ரவிகுமார் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக பாரா ஒலிம்பிக் தடகள வீரர் திலிப் காவிட், இந்திய தடகள வீராங்கனை மற்றும் தெற்காசிய தடகள சாம்பியன் ஷர்வானி சாங்லே மற்றும் பயிற்சியாளர் வைஜ்நாத் காலே கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
இந்திய தடகள வீராங்கனை ஷர்வானி சாங்லே மற்றும் தெற்காசிய தடகள சாம்பியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தின் காலநிலை தடகள பயிற்சிக்கு ஏதுவாக உள்ளது. நாங்கள் ஒரு மாத காலமாக இங்கு பயிற்சி பெற்று வருகிறோம். மலைப்பகுதியில் பயிற்சி பெறுவது விளையாட்டு களத்தில் பயனளிக்கும்.
தடகள வீரர், வீராங்கனைகள் நீலகிரியில் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சிறு வயதிலேயே தடகளம் உட்பட விளையாட்டுகளில் ஈடுபடுவது அவசியமானது” என்றார். தடகள பயிற்சியாளர் வைஜ்நாத் காலே கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் விளையாட்டுக்கு சிறப்பான சூழல் உள்ளது. அடுத்த பி.டி.உஷா, நீரஜ் சோப்ரா ஆகியோரை உருவாக்க இத்தகைய சூழல் அவசியம்” என்றார்.