சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஒடிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆக. 25-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை (ஆக.24) முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூர், பாரிமுனையில் 17 செமீ, மடிப்பாக்கத்தில் 15 செமீ, எண்ணூர், கொரட்டூர், நெற்குன்றம், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆகிய இடங்களில் தலா 14 செமீ, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், திருத்தணி ஆகிய இடங்களில் தலா 13 செமீ, திருவள்ளூர், சென்னை அம்பத்தூர், செம்பரம்பாக்கம், வளசரவாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 11 செமீ மழை பதிவாகியுள்ளது’ இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.