செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதும் அதனால் ஏற்பட்ட முன் னேற்றங்களையும் பற்றித் தெரிந்துகொள்ளச் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டும். அன்று முதல் இன்று வரை செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி தொடர்பியல், நாட்டுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண் காணிப்பு, வானிலை ஆய்வு, பேரிடர் மேலாண்மை, அறிவியல் ஆராய்ச்சி போன்று பல துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
என்ன நடந்தது? – 1957ஆம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து முதல் முறையாக ஸ்புட்னிக் 1 என்கிற செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இன்று பல்வேறு நாடுகளில் இருந்தும் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுமார் 1000 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றியும், வேறு சில செயற்கைக்கோள்கள் பிற கோள்களைச் சுற்றியும் வருகின்றன. 1975இல் விண் வெளி ஆராய்ச்சித் துறையில் காலடி எடுத்து வைத்த இந்தியா, முதல் முறையாக ரஷ்யாவின் உதவியோடு ஆர்யபட்டா செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது.
உலகின் எந்த மூலையில் இருந்தும் தொலைத் தொடர்பு கிடைக்கவும், இணைய வசதி கிடைக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளி பரப்பவும் செயற்கைக்கோள்கள் உதவி செய்கின்றன. உங்கள் பகுதியில் இன்று மழை வருமா, வெயில் அடிக்குமா என்கிற வானிலை முன்னறிவிப்பும், கூகுள் ‘மேப்’ செயலியில் உள்ள ஜிபிஎஸ் வசதியும் செயல்படச் செயற்கைக்கோள்களின் பங்களிப்பு அவசியம். தொழில்நுட்ப வளர்ச்சியால் காலப்போக்கில் செயற்கைக்கோள்களின் பயன்பாடு வெவ்வேறு விதமாக மாறிவந்துள்ளது.
பூமியைச் சுற்றும் செயற்கைக் கோள்கள், மனிதர்களின் பயன்பாட்டுக்காகப் பல தக வல்களை அனுப்புகின்றன. இவற்றைத் தவிர நிலவுக்கும் மற்ற கோள்களுக்கும் அனுப்பப்படும் செயற்கைக் கோள்கள் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை அனுப்புகின்றன. ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளோடு தற்போது இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியில் பங்கெடுக்கும் முக்கிய நாடாக மாறியுள்ளது.
எதிர்காலத்தில் செயற்கைக்கோள்கள்: ஆரம்பக் காலக்கட்டத்தில் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்கள், இன்று மிகச் சிறிய (நானோ) அளவுவரை தயாரிக்கப்பட்டு, விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன. முன்பு இருந்ததைவிடச் சீரான தொலைத்தொடர்பு, துல்லியமான கணிப்புகள், புதிய ஆராய்ச்சிகள் ஆகிய வற்றைச் செயற்கைக்கோள்கள் வழங்குகின்றன.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தில் இயங்கும் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ள சில நாடுகள், அது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டும் வருகின்றன. நாளுக்கு நாள் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்து வரும் அதேநேரம், ஒரு நாட்டின் வளர்ச்சிக்குச் செயற்கைக்கோள்களின் பங்களிப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.