இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமே ‘ககன்யான்’. 2024ஆம் ஆண்டு ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்ல இருக்கும் விண்வெளி வீரர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், ஷுபன்ஷு சுக்லா ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் பூமியிலிருந்து 400 கி.மீ. சுற்றுப்பாதையில் 3 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

பிரசாந்த் பாலகிருஷ்ணன்: 1976ஆம் ஆண்டு கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மாராவில் பிறந்தவர். குழந்தைப் பருவத்தைக் குவைத்தில் கழித்தார். பள்ளிப் படிப்பைப் பாலக்காட்டில் முடித்தார். என்.எஸ். எஸ். பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
1998ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் பணியாளர் கல்லூரியிலும் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் பயிற்றுநருக்கான பள்ளியிலும் பயின்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரோவில் இணைந்து பணியாற்றி வருகிறார். பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

அங்கத் பிரதாப்: 1982ஆம் ஆண்டு உத்தரபிர தேசத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தவர். டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்தார். தேசியப் பாதுகாப்பு அகாடமியில் படிப்பை முடித்த அங்கத் பிரதாப், 2004ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்திய விமானப்படையில் பயிற்றுநராகவும் சோதனை விமானியாகவும் பணியாற்றினார்.
2019ஆம் ஆண்டு ககன்யான் விண்வெளித் திட்டத்துக்காக, பெங்களூரு விண்வெளி மருத்துவ நிறுவனம் இவரைத் தேர்ந்தெடுத்தது. ரஷ்யாவில் 14 மாதங்கள் விண்வெளி வீரராகப் பயிற்சி பெற்றார். 12 பேர் பட்டியலில் இருந்து இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பேரில் ஒருவராக அங்கத் பிரதாப் மாறினார்.

அஜித் கிருஷ்ணன்: 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். கேந்திரிய வித்யாலயத்தில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். 1999ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள விமானப்படையில் சேர்ந்து இடைநிலைக் கல்வியைப் பயின்றார். 2002ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றார்.
பின்னர் தெலங்கானாவில் விமானப்படை அகாடமியில் சேர்ந்தார். அங்கு சிறப்பாகச் செயல்பட்டதால் குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் பெற்றார். 2003ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் போர் விமானிப் பிரிவில் சேர்க்கப்பட்டார். விமானப் பயிற்றுநராகவும் சோதனை விமானியாகவும் செயல்பட்டார். பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். ரஷ்யாவில் 14 மாதங்கள் விண்வெளி வீரராகப் பயிற்சி பெற்றுள்ளார்.

ஷுபன்ஷு சுக்லா: 1985இல் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோவில் பிறந்தார் ஷுபன்ஷு சுக்லா. 13 வயதில் கார்கில் போரால் ஈர்க்கப்பட்டு, இந்திய ஆயுதப் படையில் சேர்வ தற்கு ஆர்வம் கொண்டார். இந்தியப் பாது காப்பு அகாடமியில் சேர்ந்து படித்தார். பின்னர் இந்திய வான்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு இந்திய விண்வெளிப் பயணத்திட்டத்தில் சேர்க்கப் பட்டார்.
இந்தியாவின் மனிதர்கள் செல்லும் முதல் விண்வெளிப் பயணத்தில் (ககன்யான்) பங்குபெறும் விண்வெளி வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். சர்வதேச விண்வெளி நிலையம் 2030ஆம் ஆண்டு செயலிழந்துவிடும் என்பதால், புதிய விண்வெளி நிலையத்தைத் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறுவுவதற்கு நாசா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதிதான் அக்ஸியம் 4 திட்டம். அக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் நான்காவது கட்டத் திட்டத்தில் ஷுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் சென்று திரும்பியிருக் கிறார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்திய விண்வெளி வீரர் என்கிற சாதனையையும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் என்கிற சாதனை யையும் படைத்திருக்கிறார் ஷுபன்ஷு சுக்லா.