‘Su From So’ இயக்குநர் துமிநாட் இயக்கவுள்ள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அஜய் தேவ்கான்.
’ரேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார் அஜய் தேவ்கான். அதனைத் தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 3’ மற்றும் ‘ஹவுஸ் ஃபுல் 5’ ஆகிய படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து ‘Su From So’ இயக்குநர் ஜே.பி.துமிநாட் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அஜய் தேவ்கான். இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
ஜே.பி.துமிநாட் கூறிய கதை அஜய் தேவ்கானுக்கு மிகவும் பிடித்துள்ளது. இதனால் முழுமையான திரைக்கதையை எழுதும்படி கூறியிருக்கிறார். திரைக்கதை உடன் கூடிய சந்திப்பு, இந்தாண்டு இறுதிக்குள் நடைபெறும் என தெரிகிறது. அடுத்தாண்டு தொடக்கத்தில் இப்படம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இப்படம் காமெடி கலந்த பேய் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் பாணியில் அஜய் தேவ்கான் இதுவரை படங்கள் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 25-ம் தேதி வெளியான கன்னடப் படம் ‘Su From So’. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இதனால் இந்தியளவில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இப்படத்தினைப் பார்த்து படக்குழுவினரை பாராட்டினார்கள். அறிமுக இயக்குநர் ஜே.பி.துமிநாட், எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் இது. ஹாரர் காமெடி ஜானரில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தை கன்னட சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநராக அறியப்படும் ராஜ் பி ஷெட்டி, தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இந்தப் படத்தில் அவர் நடித்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.