லக்னோ: ‘தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சமாஜ்வாதி கட்சியும், அகிலேஷ் யாதவும் தான் பொறுப்பு’ என உத்தரப் பிரதேச மாநிலத்தின் சாயல் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பூஜா பால் கடிதம் எழுதியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட எம்எல்ஏ பூஜா பால், அகிலேஷ் யாதவுக்கு எழுதிய கடிதத்தில், “ நான் கொலை செய்யப்பட்டால், உண்மையான குற்றவாளி அகிலேஷ் யாதவ் தான். என் கணவர் பட்டப்பகலில் கொல்லப்பட்டார், எங்களுடன் நிற்பதற்கு பதிலாக, சமாஜ்வாதி கட்சி குற்றவாளிகளை காப்பாற்றியது. இன்று, எனக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன, எனக்கும் அதே நிலை ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன்.
அகிலேஷ் யாதவ் குற்றவாளிகளுக்கு எதிராகப் போராடி எனக்கு நீதியை பெற்றுத் தருவார் என்று நான் நம்பினேன். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. சமாஜ்வாதி கட்சியில், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பட்டியலினத்தவர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமே முதல் தரக் குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள், அவர்கள் கடுமையான குற்றவாளிகளாக இருந்தாலும் கூட.
எனது குடும்பத்திற்கு நீதியை உறுதி செய்ய அகிலேஷ் யாதவ் எதுவும் செய்யவில்லை. அதற்கு பதிலாக, சமாஜ்வாதி கட்சியும் சைஃபாய் குடும்பமும் எப்போதும் கொலையாளிகளுக்கு ஆதரவாக நின்றன. பாஜக அரசாங்கத்தின் கீழ்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். எனது நீக்கம் நியாயமற்றது மற்றும் பாரபட்சமானது. சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் சமூக ஊடகங்களில் என்னை மிரட்டி துஷ்பிரயோகம் செய்கின்றனர். நான் கொலை செய்யப்பட்டால், அதற்கு அகிலேஷ் யாதவும், சமாஜ்வாதி கட்சியும்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினார்.
நடந்தது என்ன? – சமாஜ்வாதி கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பெண் எம்எல்ஏ பூஜா பால். இவரது கணவர் ராஜு பால் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ. பிரயாக்ராஜ் மேற்கு தொகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் ரவுடி அதிக் அமதுவின் சகோதரர் அஸ்ரப் என்பவரை, ராஜு பால் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் காரணமாக, ஏற்பட்ட விரோதத்தால் கடந்த 2005-ம் ஆண்டு ராஜு பால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் என்பவரும் கடந்த 2023-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன்பின் அதிக் அகமதுவின் மகன் ஆசாத், ஜான்சி அருகே நடைபெற்ற என்கவுன்ட்ரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில நாட்களில் அதிக் அகமது மற்றும் ஆஸ்ரப் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது 3 பேர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் சமீபத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ பூஜா பால் பேசும்போது, “என் கணவரை கொன்றது யார் என அனைவருக்கும் தெரியும். எனது கோரிக்கையை யாரும் கேட்கவில்லை. எனது கணவரை கொன்ற அதிக் அகமதுவை, முதல்வர் புதைத்து விட்டார். எனது கணவர் கொலைக்கு நீதி வழங்கிய முதல்வருக்கு நன்றி. பிரயாக்ராஜில் பல பெண்களுக்கு முதல்வர் நீதி வழங்கியுள்ளார். ஒட்டு மொத்த மாநிலமும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறது” என்றார்.
இதையடுத்து, பூஜாவை கட்சியிலிருந்து நீக்கி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். “பல முறை எச்சரிக்கை விடுத்தும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்” என அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.