ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றிணை திலீப் சுப்பராயன் தலைமையில் காட்சிப்படுத்தி வருகிறார்கள். இப்படத்தினை ஆர்.பி.செளத்ரி மற்றும் விஷால் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பினை முடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.
இப்படத்தில் துஷாரா விஜயன், தம்பி ராமையா, அர்ஜெய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஷால் – அஞ்சலி இருவரும் இணைந்து ‘மதகஜராஜா’ படத்தில் நடித்துள்ளனர். அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதே கூட்டணி இப்படத்திலும் இணைந்து பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், எடிட்டராக ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக துரைராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.