சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஆக.30-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொகுதிவாரியாக பிரச்சாரத்தையே கடந்த ஜூலை மாதம் தொடங்கிவிட்டார். 3-ம் கட்ட பிரச்சாரத்தை நேற்றுடன் நிறைவு செய்த பழனிசாமி.
செப்.1-ம் தேதி முதல் 4-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் தொடங்குகிறார். இதனிடையே வரும் ஆக.30-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தையும் பழனிசாமி கூட்டியுள்ளார். அதன்படி, ஆக.30-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், மீதம் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பது, ஐடி விங்-ன் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் முறைகேடு பூதாகரம் ஆகியுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதா என ஆய்வு செய்யுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.