சென்னை: தேங்கிய மழைத் தண்ணீரில் மின்சார கம்பி அறுந்து விழுந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை இடியுடன் கூடிய திடீர் மழை கொட்டியது. அதேபோல், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்திலும் மழை பெய்து சாலைகளில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் தெருவில் வசித்து வந்த கொத்தனார் சாமுவேல் (57) என்பவர், அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெரு வழியாக காலை 9.30 மணிக்கு வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பலத்த மழையினால் மின்சார கம்பி அறுந்து, அங்கு தேங்கி நின்ற தண்ணீரில் விழுந்து கிடந்தது. இதை கவனிக்காத சாமுவேல் மழைத் தண்ணீரில் கால் வைத்தார். அடுத்த நொடியே மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் சாமுவேல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.