காஞ்சிபுரம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஏழை மீனவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் க.பழனிசாமி நேற்று செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார்.
செய்யூர் பேருந்து நிலையம் அருகே மக்கள் மத்தியில் அவர் பேசியது: இந்தப் பகுதி விவசாயிகள் அதிகம் நிறைந்த பகுதி. ஆனால், திமுக அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருமுறை பயிர்கடன்களை தள்ளுபடி செய்தோம். விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம், ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன.
அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. வறட்சி உள்ளிட்ட பேரிடரின் போது பயிர்க் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்று கொடுத்தோம்.
இந்தியாவிலேயே அதிகப்படியான இழப்பீட்டைப் பெற்றுக் கொடுத்தது அதிமுக அரசுதான். கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கி மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக அதனை மூடி விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.
அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் ரூ.7,300 கோடி நிதி ஒதுக்கீட்டில், 52.35 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. இப்போது கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆட்சி முடிய இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் கொடுப்பார்களா என்பது சந்தேகமே.
செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கியதே அதிமுகதான். தடுப்பணைகள், நீதிமன்றங்களை அமைத்துள்ளோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஏழை மீனவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். இவ்வாறு பழனிசாமி கூறினார். இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் தனபால், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், அதிமுக கிழக்கு மாவட்டச் செயலர் ஆறுமுகம், ஒன்றியச் செயலர் ராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்.