டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டார், மேலும் ஒருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் தாராலியில் நேற்று இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால், அப்பகுதி முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. வீடுகள், எஸ்டிஎம் குடியிருப்பு மற்றும் பிற கட்டிடங்கள் வழியாக அதிக அளவு சகதி வெள்ளம் அடித்துச் சென்றதில், தாராலி சந்தை, கோட்தீப் மற்றும் தாராலி வளாகம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. தாராலி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தன.
தாராலி அருகிலுள்ள சாக்வாரா கிராமத்தில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி ஓர் இளம் பெண் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். செப்டான் சந்தையில் சில கடைகளும் இடிபாடுகளால் சேதமடைந்தன, மேலும் அப்பகுதியில் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவம் குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நேற்று இரவு சமோலி மாவட்டத்தின் தாராலி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதாக ஒரு சோகமான தகவல் கிடைத்தது. மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, நான் உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். அனைவரின் பாதுகாப்புக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மிங்கெடெரா அருகே உள்ள தாராலி-குவால்டம் சாலை இடிபாடுகள் மற்றும் கனமழை காரணமாக தடைபட்டுள்ளது. அதே நேரத்தில் தாராலி-சக்வாரா பாதையும் மூடப்பட்டுள்ளது, இதனால் உள்ளூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பு காரணமாக தாராலி தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.