சென்னை: எதிர்வரும் நவம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இதனை அர்ஜெண்டினா அணி நிர்வாகம் தற்போது உறுதி செய்துள்ளது.
கால்பந்து விளையாட்டை அதிகம் நேசிக்கும் கேரளாவுக்கு நடப்பு உலக சாம்பியன் அர்ஜெண்டினா அணியும், கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸியின் விஜயத்தையும் கால்பந்து ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, அர்ஜெண்டினா அணி கேரளாவில் இந்த ஆண்டு திட்டமிட்டப்படி விளையாடுவதில் குழப்பம் நீடித்தது. இது தொடர்பாக கேரள மாநில அரசு தரப்பும், போட்டி ஸ்பான்சர்களும் இருவேறு கருத்தை முன்வைத்து வந்தன. இந்த குழப்பத்துக்கு மத்தியில் அர்ஜெண்டினா அணி நவம்பர் மாதம் கேரளாவில் விளையாடுகிறது என்பதை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
அர்ஜெண்டினா அணி நட்பு ரீதியான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் விளையாடும் போட்டி அட்டவணை குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அக்டோபர் 6 முதல் 14-ம் தேதி வரையில் அமெரிக்காவிலும், நவம்பர் 10 முதல் 18-ம் தேதி வரையில் அங்கோலாவின் லுவாண்டா மற்றும் இந்தியாவின் கேரளாவிலும் அர்ஜெண்டினா விளையாடுகிறது. இதில் அர்ஜெண்டினா உடன் பலப்பரீட்சை மேற்கொள்ளும் அணி குறித்த விவரம் வெளியாகவில்லை.
அர்ஜெண்டினா அணி நேரடியாக கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டு இந்தப் போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம் முடிந்ததும் டிசம்பரில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு மெஸ்ஸி வர உள்ளதாக தகவல். அந்த பயணத்தில் கொல்கத்தா, மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லிக்கு அவர் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்.