புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை மோசடி நிறுவனமாக கடந்த ஜூன் 13ம் தேதி வங்கி அறிவித்தது. இது குறித்த எழுத்துப்பூர்வ தகவலை ஜூன் 24-ம் தேதிக்கு ரிசர்வ் வங்கிக்குத் தெரிவித்த பாரத ஸ்டேட் வங்கி, சிபிஐயிடம் புகார் அளிக்கும் பணியிலும் ஈடுபட்டது. இது குறித்த எழுத்துப்பூர்வ பதிலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கடந்த மாதம் மக்களவையில் அளித்தார்.
இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அந்த நிறுவனத்துக்கும் அதன் இயக்குநர் அனில் அம்பானிக்கும் சொந்தமான இடங்களில் இன்று (சனிக்கிழமை) சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்த தகவலை சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.