ஹைதராபாத்: மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான சுரவரம் சுதாகர் ரெட்டி, நேற்று (ஆகஸ்ட் 22) இரவு காலமானார். அவருக்கு வயது 83.
இடதுசாரி அரசியலில் மிக முக்கிய தலைவரான சுதாகர் ரெட்டி, வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார்.
தெலங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டத்தின் கொண்ட்ராவ்பள்ளி கிராமத்தில் சுதாகர் ரெட்டி மார்ச் 25, 1942 அன்று பிறந்தார். தொடக்கம் முதலே இடதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட அவர், மாணவர் இயக்கங்களில் தீவிரப் பங்காற்றினார். கர்னூலில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்காக 15 வயதாக இருந்தபோதே போராட்டத்தை வழிநடத்தினார் இவர்.
சுதாகர் ரெட்டி இரண்டு முறை நல்கொண்டா தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக (1998-1999 மற்றும் 2004-2009) தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த சொற்பொழிவாளரான இவர், நாடாளுமன்றத்தில் தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி, விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் நல்வாழ்வுக்காக குரல் கொடுத்தார். மேலும், அரசின் ஊழலை வெளிக்கொணரும் முயற்சிகளிலும் இவர் பெயர் பெற்றவர்.
2012 முதல் 2019 வரை மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார் இவர். தனது அரசியல் வாழ்க்கையில் ஏராளமான மக்கள் போராட்டங்களில் முன்னணியில் இருந்த அவர், தனது கொள்கைகள் மீதான அர்ப்பணிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை முறைக்காக போற்றப்பட்டவர். சுதாகர் ரெட்டிக்கு மனைவி டாக்டர் பி.வி. விஜய லட்சுமி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் சுதாகர் ரெட்டிக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.