தமிழகமே வியக்கும் வகையில் மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கிறார் விஜய். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தவெகவின் இந்த மாநாடு மீதான எதிர்பார்ப்பு, அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து பார்ப்போம்…
மதுரையில் 2-வது மாநில மாநாடு என விஜய் அறிவித்த உடனே எதிர்பார்ப்பு பற்றிக்கொண்டது. ஏனென்றால், முதல் மாநில மாநாட்டை வட தமிழகமான விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தியது தவெக. அதேபோல தென்பகுதியான மதுரையில் பிரம்மாண்டம் காட்ட முடியுமா என்ற கேள்வி இருந்தது. அந்தக் கேள்விகளுக்கு நெத்தியடியாக பதிலை சொன்னது, மதுரையில் திரண்ட லட்சக்கணக்கான கூட்டம்.
பிரம்மாண்ட கூட்டம், அதற்கான ஏற்பாடுகள், கூட்ட மேலாண்மை என தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற முதன்மைக் கட்சிகளுக்கு இணையாக கலக்கியது தவெக. தமிழகம் முழுவதிலும் இருந்து சாரை சாரையாக திரண்ட இளைஞர்கள் மதுரையை ஸ்தம்பிக்க வைத்தனர்.
தவெக மாநாடு ‘ஹிட்’டா?
2026 தேர்தலுக்கு தயாராகும் நேரத்தில் இந்த மாநாடு, தவெகவுக்கு பல பூஸ்டர் பாயின்டுகளை வழங்கியுள்ளது. ஒன்று, கட்சிக்கான கட்டுமானம். இந்த மாநாட்டுக்கு வெறும் மதுரை அல்லது அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து மட்டும் கூட்டம் வரவில்லை. தமிழகம் முழுவதிலுமிருந்து கூட்டம் வந்தது. அப்படியானால், இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டும் அளவுக்கு கிளை, ஒன்றியம், நகரம், தொகுதி, மாவட்டம் என முக்கிய கட்டமைப்புகள் ஓரளவு உருவாகியுள்ளதை இது காட்டுகிறது.
அடுத்ததாக விஜய்யின் பேச்சு. விஜய்யின் ‘தங்கிலிஷ் கலந்த 2கே கிட்ஸ்கள் பாணியிலான பேச்சு’ இந்த முறையும் அவர்களின் தொண்டர்களுக்கு திருப்தியாக இருந்ததை விசில் சத்தங்கள் உறுதிசெய்தன.
அதேபோல, விஜய் தனது பேச்சின் மூலமாக பல முக்கிய கேள்விகளுக்கும் பதில் சொல்லியுள்ளார். அதில், திமுக, பாஜக கட்சிகள்தான் எதிரி என்பதை மீண்டும் அழுத்தமாக கூறினார். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பெயர்களை சொல்லி இதுவரை விமர்சிக்காத விஜய், இப்போது மோடியின் பெயரை சொன்னதுடன், ‘அங்கிள் ஸ்டாலின்’ என்று அனல் கிளப்பினார். முக்கியமாக இதுவரை தொடாத அதிமுகவையும் வம்புக்கு இழுத்து விமர்சித்ததுடன், சீமானுக்கும் மறைமுகமாக மெசேஜ் சொன்னார்.
அதேபோல, உண்மை, நேர்மையான அரசியல் என தனது பெரும்பான்மை தொண்டர்களான 2கே கிட்ஸ்களுக்கு புரியும் வகையில் சிலவற்றை பேசியதுடன், சிங்கத்தின் கதை, குட்டிக் கதையையும் சொல்லி எழுச்சியூட்டினார். இந்த மாநாடு தவெகவினருக்கு மிகவும் நிறைவானதாகவே இருந்தது. அதையும் தாண்டி பொதுத்தளத்தில் உள்ளவர்களையும் கவனிக்க வைத்துள்ளது என்பது உண்மைதான் என்கின்றனர் அரசியில் பார்வையாளர்கள்.
திமுக, அதிமுக, பாஜகவுக்கு மாற்றான சக்தி எனும் இமேஜை ஓரளவு இந்த மாநாட்டின் மூலமாக பதியவைத்துள்ளார் விஜய். அதேபோல, அதிமுகவுடன் எப்படியும் கூட்டணி வைத்துவிடுவார் என்று இதுவரை தன் மீது இருந்த யூகங்களையும் உடைத்தெறிந்துள்ளார்.
முக்கியமாக, இந்த மாநாட்டில் எம்ஜிஆரை புகழ்பாடியும், அதிமுக தொண்டர்களை பரிவோடும் பேசினார். இதில் இரு கணக்குகள் உள்ளது. ஒன்று இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள அதிமுகவினரை தன்பக்கம் இழுப்பது. அடுத்ததாக இபிஎஸ் மீது கோபத்தில் உள்ள ஓபிஎஸ், தினகரனுக்கு வலைவீசுவது. அதேபோல விஜயகாந்த்தை பாராட்டி தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவருவது என பல கணக்குகளை தன் பேச்சில் வெளிப்படுத்தினார்.
கூட்டணிக்கு நான்தான் தலைமை, ஆனால் என்னோடு வந்தால் ஆட்சியில் பங்கு தருவேன் என்று மீண்டும் அழுத்தமாக சொல்லியுள்ளார்.
பிரமாண்ட கூட்டம், விஜய்யின் பேச்சு, எதிரிகள் யாரென்ற தெளிவு, கூட்டணிக்கான அழைப்பு என எல்லா விஷயத்தையும் தன் சுருக்கமான பேச்சில் தெளிப்படுத்தியது சிறப்புதான். எனவே, எப்படி பார்த்தாலும் தவெகவுக்கும், விஜய்க்கும் இந்த மாநாடு நிச்சயம் ஹிட்தான்.
அதீத தன்னம்பிக்கையில் இருக்கிறாரா விஜய்?
ஆனால், விஜய்க்காக திரண்ட கூட்டம் என்பது இது ஒரு கட்சியின் மாநாடுதான் என்று நிரூபித்தாலும் கூட, விஜய்யின் உரையை மட்டுமே பிரதானப்படுத்தி ஒன்றரை, ரெண்டு மணி நேரத்தில் நடந்து முடிந்ததால், இந்து மாநாடுதானா அல்லது வெறும் பொதுக் கூட்டமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் தீர்மானங்கள் கூட பெரிதாக ஹைலைட் ஆகவில்லை. அதேபோல், விஜய்யின் பேச்சில் வெறும் எதிர்ப்பரசியல் மட்டுமே இருந்ததே தவிர, தவெகவின் கொள்கைகள் என்னென்ன என்பதற்கான கேள்விக்கு இறுதி வரை விடையே கிடைக்கவில்லை.
அதேபோல், தவெக என்பது விஜய் என்ற ஒற்றை முகத்தையும் பிம்பத்தையும் வைத்துதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசியல் ஞானமும், அனுபவமும் மிக்க உறுதுணையான பின்புலத் தலைவர்கள் யாருமே அங்கு இதுவரை இல்லை என்பதையும் மாநாட்டு மேடையில் பார்க்க முடிந்தது. இவையெல்லாம், தவெக மாநாடு ‘மெகா ஹிட்’ ஆகாமல் போனதற்கான காரணங்கள் எனலாம்.
1967, 1977 வரலாறு திரும்புகிறது என்கிறார் விஜய். கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் அண்ணாவும், எம்ஜிஆரும் ஆட்சியை பிடித்துவிடவில்லை. திமுக தொடங்கப்பட்டது 1949ஆம் ஆண்டில். அக்கட்சி படிப்படியாக வளர்ந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு 67-ல் ஆட்சியை பிடித்தார் அண்ணா.
திமுகவில் 1953-ல் இணைந்து அதன்பின் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார் எம்ஜிஆர். 1962 எம்எல்சி ஆகவும், 1967, 71 தேர்தல்களில் திமுக சார்பிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1972-ல் அதிமுக தோன்றிய பின்னர் திண்டுக்கல், கோவை மேற்கில் நடந்த இடைத்தேர்தல்களில் நின்று வெற்றி பெற்றது. 1974ல் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியையும் கைப்பற்றியது அதிமுக. இதன் பின்னர்தான் 1977-ல் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தார்.
இது இரண்டும் கடந்த கால தேர்தல் வரலாறுதான். ஆனால் விஜய் மேடையில் பேசும்போது, இதுபோன்ற புள்ளிவிவரங்களை எல்லாம் பொய்யாக்கி வெல்வேன் என்கிறார். இது அதீத தன்னம்பிக்கையா அல்லது சாத்தியமான பேச்சா என்பது விரைவில் தெரியும்.
கடந்த ஆண்டு கட்சியை தொடங்கிய விஜய், அடுத்த ஆண்டு ஆட்சியை பிடித்து காட்டட்டுமா என சவால் விடுகிறார். ஆனால், விஜய் சொல்லும் 1967, 77 தேர்தல்களில் அண்ணா, எம்ஜிஆரே வலுவான கூட்டணி அமைத்துதான் வெற்றி பெற்றார்கள். அப்படி பார்த்தால், முதற்கட்டமாக விசிக, கம்யூனிஸ்டுகளை கூட்டணிக்குள் இழுக்க முயற்சி செய்த விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இப்போது, விஜய் கைவசம் உள்ள வாய்ப்புகள் பாமக, தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் மட்டும்தான். இவர்களை தவெக அணிக்குள் கொண்டுவருவது அத்தனை சுலபமில்லை, அதற்கு பாஜக அனுமதிக்குமா என்பதும் கேள்விக்குறிதான். இதையெல்லாம் தாண்டி விஜய்யால் வெல்ல முடியுமா என்பது அவரின் நண்பா, நண்பிகள் கையில்தான் உள்ளது