இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக, 2015-ம் ஆண்டு ‘இசை’ படத்தைத் தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இப்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
எஸ்.ஜே.சூர்யாவின் கனவு படமான இதில், காருக்கு முக்கியத்துவம் இருப்பதால், ஜெர்மனியில் இருந்து புதிய பிஎம்டபிள்யூ கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. இதன் முதல் ஷெட்யூல் இப்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு ‘கில்லர்’ படத்தில் மீண்டும் இணைவார் என்று தெரிகிறது.