மும்பை: புரோ கபடி லீக் 12-வது சீசன் வரும் 29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் லீக் வடிவத்தில், வடிவத்தில், போட்டி அமைப்பாளர்கள் மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இதன்படி லீக் சுற்று 108 ஆட்டங்களை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் 18 ஆட்டங்களில் விளையாடும். டை-பிரேக்கர் விதிமுறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும் லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களுக்கும் கோல்டன் ரெய்டும் கொண்டுவரப்படுகிறது. இதற்கு முன்னர் கோல்டன் ரெய்டு, பிளே ஆஃப் சுற்றுகளில் மட்டுமே இருந்தது. இனிமேல் ஆட்டங்கள் சமநிலையில் முடிவடைந்தால் வெற்றியை தீர்மானிக்க 5 ரெய்டுகள் கொண்ட ஷுட் அவுட் நடத்தப்படும். 5 ரெய்டுகளுக்குப் பிறகும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், கோல்டன் ரெய்டு விதி அமல்படுத்தப்படும்.
கோல்டன் ரெய்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் சமநிலையில் இருந்தால், டாஸ் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். புள்ளிகள் வழங்குவதிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளிகள் கிடையாது.
இந்த சீசனில் பிளேஆஃப் சுற்றிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் பிளே-இன் சுற்றும் அறிமுகமாகிறது. இதன்படி லீக் சுற்றின் முடிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆஃப்களுக்கு தகுதி பெறும். லீக் சுற்றின் முடிவில் 5-வது முதல் 8-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-இன் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி எலிமினேட்டர் ஆட்டத்துக்கு முன்னேறும்.
3-வது மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் மினி-குவாலிஃபையரில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதே நேரத்தில் தோல்வி அடைந்த அணிக்கு பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிஃபையர் 1-ல் பலப்பரீட்சை நடத்தும்.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி குவாலிஃபையர் 2 மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான மற்றொரு வாய்ப்பை பெறும். பிளே ஆஃப் சுற்றில் 3 எலிமினேட்டர் ஆட்டங்கள், 2 குவாலிஃபையர் ஆட்டங்கள் இடம் பெறும். இந்த மாற்றங்கள் போட்டியில் சுவாரசியத்தை அதிகரிக்கக்கூடும்.