பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பெங்களூரு நெரிசல் மரணங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசுகையில், ‘‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே” என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடினார்.
மேலும் அவர் பேசுகையில், “எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகாவும் நானும் ஒரு காலத்தில் ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து ஒன்றாக செயல்பட்டோம். ஆனால் இப்போது வேறு கட்சிகளில் இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் அந்த அமைப்பின் பாடலை பாடியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடலை பாடும் வீடியோவை ராகுல் குடும்பத்தினர் பார்த்தால் கோமா நிலைக்கு சென்றுவிடுவார்கள். காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து இல்லை என இதன் மூலம் தெளிவாகிறது’’ என பதிவிட்டுள்ளார்.