சென்னை: இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, நாளை சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார். குடியரசுத் துணைத் தலைவராகவும் மாநிலங்களவைத் தலைவராகவும் இருந்த ஜெகதீப் தன்கர் ஜூலை 21-ம் தேதி உடல்நிலையை காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை உடனே தேர்தல் ஆணையம் தொடங்கியது.
செப்.9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இணைந்து தேர்வு செய்வார்கள். மக்களவையில் தற்போது 542 எம்பிக்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. அதேபோல் மாநிலங்களவையில் 239 எம்பிக்கள் உள்ளனர். 6 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, மகாராஷ்டிர மாநில ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ள நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வைக்கும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டது. இதற்கிடையில், இண்டியா கூட்டணி சார்பில் அரசியல் சார்பற்ற ஒருவரை நிறுத்த ஆலோசனை நடைபெற்று, இறுதியாக ஆந்திராவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி பெயர் அறிவிக்கப்பட்டது. அவரும், இண்டியா கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் ஒவ்வொரு மாநிலமாக சென்று இண்டியா கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
விருந்துக்கு ஏற்பாடு: அந்த வகையில், நாளை ஆக.24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை வருகிறார். அன்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசும் அவர், பின்னர் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அவர் விருந்தளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.