புதுடெல்லி: டெல்லியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அவற்றைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உத்தரவையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, குழந்தைகளை நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், வெறிநாய்கள் கடிப்பதால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டும் பலர் இறக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் அவ்வப்போது வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, ‘‘டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். இதை 8 வாரங்களுக்குள் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. மேலும், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும், கருத்தடை செய்ய வேண்டும் என்று டெல்லி அரசு மற்றும் மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, தெரு நாய்களைப் பிடித்து தனி மைதானத்தில் அடைக்கும் நடவடிக்கைகளில் டெல்லி அரசு ஈடுபட்டது. இதற்கு செல்லப் பிராணி வளர்ப்பவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைக் கண்டித்து போராட்டங்களும் நடந்தன. உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிலர் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகிய 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ‘‘தெரு நாய்களைப் பிடித்து அடைப்பதற்கான காப்பகங்கள் இல்லை. அத்துடன், எதிர்தரப்பினரின் வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்று வாதாடினார்.
டெல்லி அரசு சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் வாதிடும்போது, “நாட்டில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் நாய் கடிக்கு உள்ளாகின்றனர். ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் தெரு நாய் கடியால் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பெரும்பாலும் குழந்தைகள்தான் தெரு நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். விலங்குகளை யாரும் வெறுக்கவில்லை. அவற்றைக் கொல்ல வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. அவற்றை பொதுமக்களிடம் இருந்து விலக்கி வைக்க சொல்கிறோம்” என்றார்.
இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகிய 3 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: தெரு நாய்களை அடைப்பதற்கு போதிய காப்பகங்கள் உள்ளனவா அல்லது மாநகராட்சியில் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட போதிய ஊழியர்கள் இருக்கின்றனரா போன்ற விவரங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவில் மாற்றங்களை அறிவிக்கிறோம்.
தெரு நாய்களைப் பிடித்து நிரந்தரமாக காப்பகங்களில் அடைக்கும் உத்தரவு மிகவும் கடுமையானது. அதை நிறுத்தி வைக்கிறோம். தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை. வெறிப்பிடித்த நாய்கள், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களைத் தவிர, மற்ற நாய்களை விடுவிக்க வேண்டும். மேலும், இதுவரை பிடிக்கப்பட்டுள்ள நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு விடுவிக்க வேண்டும். ரேபிஸ் மற்றும் தொற்றுள்ள நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும். முக்கியமாக, தெரு நாய்களுக்கு பொது இடங்களில் யாரும் உணவளிக்கக் கூடாது என்று கண்டிப்பாக கூறுகிறோம். தெரு நாய்களுக்கு உணவளிக்க ஒரு பொது இடத்தை மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த உத்தரவை மீறும் தொண்டு நிறுவனங்கள், சமூக நல ஆர்வலர்கள் அல்லது தனி நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் தலா ரூ.25 ஆயிரம், தொண்டு நிறுவனங்கள் தலா ரூ. 2 லட்சத்தை முன்வைப்புத்தொகையாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இந்த தொகை தெரு நாய்களின் காப்பகங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிக்காக பயன்படுத்தப்படும்.
மாநிலங்கள் பதில் அளிக்க வேண்டும்: அதேபோல, தெருநாய்களை தத்து எடுக்க விரும்பும் ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட மாநகராட்சியை அணுகி விண்ணப்பிக்கலாம். ஆனால், அந்த நாய்களை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது. நாடு முழுவதும் தெரு நாய்கள் பராமரிப்புக்கு ஏற்ற வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். தெருநாய்கள் தொடர்பாக நாட்டின் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். இந்த வழக்கு விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்புக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், முன்னாள் எம்.பி.யும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி உட்பட பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.