தமிழில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இதுவரை ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், அரசியல் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்த வேண்டி இருந்ததால் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 8-வது சீசனை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது வித்தியாசமான அணுகுமுறை பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் விரைவில் தொடங்க உள்ள 9-வது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்க உள்ளதாக ஜியோஹாட்ஸ்டார் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ஜியோஸ்டார் தென்னிந்திய பிரிவு தலைவர் கிருஷ்ணன் குட்டி கூறியதாவது, “இந்த முறை சில சமூக ஊடக பிரபலங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர். இதற்கு முன்னர் நெல்சன், ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற பிரபல இயக்குநர்கள் இந்த நிகழ்ச்சியை இயக்கிய நிலையில், இந்த சீசனை பிரவீன் மற்றும் அர்ஜூன் இயக்க உள்ளனர்.

மேலும், ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்கள், நேரடியாக போட்டியாளர்கள் குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். வரவிருக்கும் ஒன்பதாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகும்” என்று அவர் தெரிவித்தார்.