மேடையில் ‘அங்கிள்’ என முதல்வர் ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் பேசியிருப்பது சரியல்ல. விஜய் 51 வயதில் ‘பூமர்’ மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவரது மனது கஷ்டப்படாதா?” என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் பங்கேற்க வந்த தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் கே.அண்ணா மலை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “2026 தேர்தலில் தவெக – திமுக இடையேதான் போட்டி என்று விஜய் பேசியுள்ளார். அப்படி பேசவில்லை என்றால், அவர் கட்சி ஆரம்பித்ததில் அர்த்தம் இல்லாமல் போய்விடும். இதை நான் தவறாக பார்க்கவில்லை.
அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களின் எதிரி திமுக என சொல்வது, மக்களின் மனநிலையை பிரதிபலிக் கிறது. விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றாலும், சித்தாந்தத்தில் நேர் எதிராக இருக்கிறோம். அரசியலில் எப்போதும் அவர்களின் பலத்தைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும். ஆனால் விஜய் மற்றவர்களுடைய பலவீனத்தை மட்டும்தான் பேசியிருக்கிறார். அவருடைய பலத்தை பற்றி பேசவில்லை.
பொதுமக்கள் பாஜகவை ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்கள் கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18 சதவீதம் வாக்களித்தனர். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் பாஜக மீதும், பிரதமர் மீதும் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
விஜய் மாநாட்டுக்கு மக்கள் வரலாம், ரேம்வாக் வரும்போது கைத்தட்டலாம். ஆனால் வாக்களிக்கும்போது மக்கள் யோசிப்பார்கள். இவர் ஐந்தாண்டுகள் அரசியலில் தாக்குபிடிப்பாரா என்று பார்ப்பார்கள். வாக்காக மாறும்போது மக்கள் நிறைய யோசிப்பார்கள். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ஒரு மாதிரியும், அரசியலுக்கு வந்த பிறகு ஒரு மாதிரியும் பேசுகிறார்.
முதல்வரை மேடையில் வைத்து அங்கிள் என விஜய் பேசியிருப்பது சரியல்ல. விஜய் 51 வயதில் ‘பூமர்’ மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் விஜய்க்கு மனது கஷ்டப்படாதா? வார்த்தைகளை பொது இடத்தில் பயன்படுத்தும்போது பக்குவமாக பேச வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
இதனிடையே, “நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். குறிப்பாக, இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். ஆனால், அரசியல் பாடம் கற்றுக்கொண்டு, என்ன பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்பதைப் புரிந்து கொண்டு, கொள்கை ரீதியாக பேச வேண்டும். மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று கூறும் அளவுக்கு விஜய் வளர்ந்து விடவில்லை” என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.