நெய்வேலி: ‘இல்லம் தேடி உள்ளம் நாடி’ என தமிழக முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நெய்வேலியில் உள்ள திரையரங்கில் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தை பார்த்து மனம் உருகி கண்ணீர் விட்டு அழுதார், அவருடன் அவர் மகன் விஜய பிரபாகரனும் விசில் அடித்துக் கொண்டே அழுதார்.
தமிழ் திரையுலகில் 1979-ம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள், சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை போன்ற திரைப்படங்கள் மூலம் பட்டித் தொட்டிகள் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த விஜயகாந்த் நடித்து 1991-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம்தான் விஜய்காந்த்துக்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது. இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
சமூக பொறுப்புள்ள திரைப்படங்கள் நடித்து புகழ்பெற்ற விஜயகாந்த், கடந்த 2005-ம் ஆண்டு தேமுதிக எனும் கட்சியை உருவாக்கி 2006 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு விருத்தாசலம் தொகுதியில் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 27 எம்எல்ஏ-க்களோடு சட்டப்பேரவை சென்றவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் விளங்கினார். பின்னர் உடல்நலம் குன்றிய நிலையில் பாதிக்கப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு உயிரிழந்தார்.
விஜயகாந்த் திரைப் பயணத்தின் மைல் கல் திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ ரீ- ரிலீஸ் செய்து மீண்டும் திரைக்கு புதுப்பொலிவுடன் வெளிவந்தது.‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இல்லம் தேடி உள்ளம் நாடி எனும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, கடந்த இரண்டு தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அந்த வகையில் நெய்வேலியில் தங்கி இருந்தார். அப்போது நெய்வேலி உள்ள திரையரங்கில் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது.
இதை அறிந்த பிரேமலதா, இந்த திரைப்படத்தின் முதல் காட்சியை பிரேமலதா அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தனர். பேண்ட் வாத்தியங்கள் முழங்க திரையரங்குக்குள் அழைத்து வரப்பட்ட நிலையில், இந்தப் படம் துவக்கம் முதல் கைத்தட்டி ரசித்து பார்த்தனர். முதல் முறையாக விஜயகாந்த் சண்டைக் காட்சியில் தோன்றியபோது பிரேமலதா விஜயகாந்த் கதறி அழத் துவங்கினார்.
அப்போது அவரை விஜய பிரபாகரன் மற்றும் சுதீஷ் ஆகியோர் ஆறுதல் கூறினர். சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு 4கே தொழில் நுட்பத்தில் டிஜிட்ட ல் வடிவில் வெளியாகி உள்ள கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் படத்தை பார்த்த பின்னர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறுகையில் ”கேப்டன் பிரபாகரன் படத்தை கேப்டன் அவர்கள் மாவீரன் போல் நடித்துள்ளார். இப்ப எடுத்த படம் போல் இருக்கிறது. மாவீரனுக்கு மனைவியாக வாழ்ந்தது பெருமிதமடைகிறேன்.
நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராட்டம் செய்தவர்களை என்எல்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். எனவே ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாள ராக பணி அமர்த்த வேண்டும்” என்று பிரேமலதா கூறியுள்ளார்.