திருச்சி: “தமிழக முதல்வரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது தவெக தலைவர் விஜய்க்கு அழகல்ல. அவருக்கு தேர்தலில் பதில் சொல்வோம்” என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் தமிழக முதல்வரை ‘அங்கிள்’ என விமர்சனம் செய்துள்ளார். அவருடைய தராதரம் அவ்வளவுதான். ஒரு மாநில முதல்வரை, பெரிய கட்சியின் தலைவரை, 50 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவரை நேற்று அரசியலுக்கு வந்தவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது அழகல்ல. 50 பேர் கூடிவிட்டார்கள் என்பதற்காக எது வேண்டும் என்றாலும் பேசுவது சரியல்ல. அவருக்கு மக்களும் நாங்களும் தேர்தலில் சரியான பதில் சொல்வோம்” என்று அவர் கூறினார்.
இதனிடையே, சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், “முதல்வர் மு.க.ஸ்டாலினை விஜய் மாமா (அங்கிள்) என்று கூப்பிடுவதில் தவறில்லை. அவர் 2026 தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று கூறியுள்ளார். திமுகவுடன் போட்டியிட எங்களுக்கு தகுதியில்லையா என்று மற்ற எதிர்க்கட்சிகள்தான் உணர்ச்சிவசப்பட வேண்டும். ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யத்தான் செய்வர். அதற்கான பதிலை தேர்தலில் மக்கள் அளிப்பர்” என்றார்.
முன்னதாக, மதுரை தவெக மாநாட்டில் விஜய் பேசும்போது, “ தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் வெற்று விளம்பர மாடல் திமுக, பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறது. ஆட்சியில் இல்லாவிட்டால் போங்க மோடிங்குறது. ஆட்சிக்கு வந்துவிட்டால் வாங்க மோடிங்குறது. தவிர, டெல்லியில் சீக்ரெட் மீட்டிங் நடத்துறது. ‘ஸ்டாலின் அங்கிள் வாட் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள்’.
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், அதை செய்தது கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் கேள்வி கேட்பேன். நீங்கள் நேர்மையான, நியாயமான ஆட்சி நடத்துகிறீர்களா? பெண்களுக்கு ரூ.1000 கொடுத்துட்டா போதுமா. அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்றார்கள். சொன்னதெல்லாம் செஞ்சாங்களா?” என்று கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.