கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை நகராட்சி பேருந்து நிலையம் அமைப்பதில் திமுக, அதிமுக இடையே நீடித்தும் வரும் பனிப்போரால் பேருந்து நிலையம் அமைவதில் சிக்கல் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கடந்த 2021-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
24 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட இந்த நகராட்சியில் 24 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள இந்த நகராட்சியின் பேருந்து நிலையம் மிகச் சிறிய அளவில் இருப்பதால், பேருந்துகள் வந்து செல்ல போதுமான இடமில்லாததால், பயணிகள் புழங்கவும் போதிய வசதியின்றி இருந்தது.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் உளுந்தூர் பேட்டை எம்எல்ஏ மணிக் கண்ணன் முயற்சியில் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் 6.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்து, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றித் தருமாறு நகர்மன்றத் தலைவருக்கு பரிந்துரைத்தார்.
அதன்படி அந்த இடத்தை தேர்வு செய்வதற்கான ஆயத்தப் பணிகளை நகர்மன்றத் தலைவர் திருநாவுக்கரசு மேற்கொண்டு வந்த நிலையில், அதிமுக உறுப்பினர்களோ, எம்எல்ஏ தேர்வு செய்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கக் கூடாது எனவும், சேலம் செல்லும் சாலையில் அஜிஸ் நகர் பகுதியில் அமைக்க வேண்டும் எனக் கூறியதால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து பேருந்து நிலையத்தை உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை எம்எல்ஏ மணிக்கண்ணன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மூலமாக மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் நகர்மன்ற ஆணையரும் தீர்மானம் நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உளுந்தூர் பேட்டை குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில், “சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் அமையும்பட்சத்தில் நகரம் விரிவாக்கமடையும். வணிக ரீதியாக வணிகர்களுக்கும் வருவாய் ஈட்ட முடியும்.
அதிமுகவினர் அஜிஸ் நகர் பகுதியில் அமைக்க வேண்டும் எனக் கூறுவதற்கு காரணம், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோயில் கட்டப்படுகிறது. இதனை முன்னின்று செய்பவர் அங்கு அதிமுக மாவட்டச்செயலாளராக உள்ள குமருகுரு. எனவே அதிமுகவினர் அங்கு அமைக்க வேண்டும் என கூறுகின்றனர்” என்றார்.
இதுதொடர்பாக அதிமுக நகரச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினர் தமிழரசியின் கணவருமான துரையிடம் கேட்டபோது, “சேலம் சாலையில் உள்ள அஜிஸ் நகர் பகுதியில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தைத் தான் அதிமுக ஆட்சியில் தேர்வு செய்தோம். ஆனால் தற்போது நகர மக்களுக்கு விருப்பமில்லாத உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் அமைத்தால் அவை நகரத்தில் இருந்து தூரமாக இருக்கும் என்பதால் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்” என்றார்.
இதுகுறித்து நகர்மன்ற ஆணையர் எஸ்.கே.புஷ்க்ராவிடம் கேட்டபோது, தற்போது நான் எதையும் கூற இயலாது என முடித்துக்கொண்டார்.