“அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க ஸ்டாலினுக்கு கை வலிக்கிறதா?” – அண்மையில் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் இப்படியொரு கேள்வியை எழுப்பினார்.
நெல்லை மாவட்டத்திலிருந்து 2019-ல் தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து தென்காசியில் புதிதாக கட்டிமுடிக் கப்பட்ட ஆட்சியர் அலுவலகம் 2 ஆண்டுகளாக திறக்கமுடியாமல் கிடப்பதைத்தான் இப்படி காட்டமாக சுட்டிக்காட்டினார் பழனிசாமி. ஆனால் தென்காசி மக்களைக் கேட்டால், இது கதையே வேறல்ல… என்று விரிக்கிறார்கள்.
தென்காசி மாவட்டம் உதயமாகி ஓராண்டு கழித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே 11.11 ஏக்கர் நிலமானது ஆட்சியர் அலுவலகம் கட்ட தேர்வுசெய்யப்பட்டது. இந்த இடத்தில் ரூ.119 கோடி மதிப்பீட்டில் ஆட்சியர் அலுவலகம் கட்ட 10.12.2020-ல் அப்போதைய முதல்வர் இபிஎஸ் காணொலி வழியே அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டுமானப் பணிகள் முடிவுக்கு வந்தன. இருந்த போதும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் புதிய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு திறக்கமுடியாமல் இருக்கிறது மாவட்ட நிர்வாகம். இதனால், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முக்கிய பிரிவுகள் பல்வேறு இடங்களில் தற்காலிக கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தான், தனது சுற்றுப்பயணத்தின் போது, “இது அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்ட கட்டிடம் என்பதால் அவர்கள் திறக்கமாட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டும்” என பொத்தாம் பொதுவில் அள்ளித் தெளித்தார் இபிஎஸ்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன், “அதிமுக ஆட்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு முதலில் 3 குளங்களுக்கு மத்தியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்தனர். போக்குவரத்து வசதி இல்லாத அந்த இடத்துக்கு பொதுமக்கள் வந்து போவது சிரமம் என்பதாலும் குளங்களால் சூழப்பட்ட அந்தப் பகுதியில் கட்டிடம் கட்டினால் உறுதியாக இருக்காது என்பதாலும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டங்களை நடத்தினோம். நான் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தேன்.
இத்தனைக்கும் பிறகுதான் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மாற்று இடத்தை தேர்வு செய்தார்கள். ஆனால், அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட துறைகளில் முறையாக அனுமதி பெறாமலே அடிக்கல் நாட்டி கட்டிடப் பணிகளை துவக்கிவிட்டார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கலானதால் கட்டிடத்தை கட்டிமுடித்தும் திறக்கமுடியாமல் இருக்கிறது. உண்மை இவ்வாறு இருக்க, எடப்பாடி பழனிசாமி தனது இஷ்டத்துக்கு பேசி திமுக மீது பழி சுமத்தியதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரான செல்வமோகன் தாஸ் பாண்டியனோ, “ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் எங்கள் ஆட்சியிலேயே 75 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் சில மாதங்கள் எங்கள் ஆட்சி நீடித்திருந்தால் நாங்களே கட்டிடத்தை திறந்திருப்போம். ஆனால் திமுக ஆட்சியில், தேவையில்லாமல் கட்டுமானப் பணிகளை ஓராண்டு காலம் இழுத்தடித்தனர்.
அரசு கட்டிடங்களுக்கு கட்டிட வேலைகளை ஆரம்பித்த பிறகு தேவையான அனுமதிகளை பெறுவது வழக்கமான நடைமுறைதான். சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றுதான் அர்த்தம். அதிகாரிகளை சரியான முறையில் வேலை வாங்காதது ஆட்சியாளர்களின் தவறு தானே?
பணிகளை முடித்து 2 ஆண்டுகளாக அனுமதி பெறாமலும், நீதிமன்றத்தில் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் ஆளுங்கட்சியின் இயலாமை தானே? அதைத்தான் எடப்பாடியார் சுட்டிக்காட்டினார்” என்றார்.
“உன்னால் தான் நின்னு போச்சு என ஒருவரை மாற்றி ஒருவர் இனியும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்காமல், கட்டிமுடிச்ச ஆட்சியர் அலுவலகத்தை கூடிய சீக்கிரம் திறக்கப் பாருங்கப்பா என்கிறார்கள் தென்காசி மாவட்ட மக்கள்!