சென்னை: பயணிகள் வசதிக்காக, தாம்பரம்- திருச்சிராப்பள்ளி ரயில் உட்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவை அடிப்படையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களுக்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து அவை நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் – திருச்சிராப்பள்ளி ரயில் உட்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட உள்ளன.
இதன்படி, தாம்பரம் – திருச்சிராப்பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06191), செப்.2 முதல் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது.
திருச்சிராப்பள்ளி – தாம்பரத்துக்கு மேற்கண்ட கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06190), செப்.2-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது.
இருமார்க்கமாக தலா 65 சேவைகள் இயக்கப்படஉள்ளன. இதுதவிர, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் சேவை செப்.7-ம் தேதி முதல் நவ.30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட உள்ளது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.