மெக்கே: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்கே நகரில் இன்று நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றன. கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த ஆட்டத்தில் 297 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியானது கேசவ் மகராஜின் சுழலில் சிக்கி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை சந்தித்து இருந்தது. இந்நிலையில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் இன்று மோதுகின்றன. 10 காலை 10 மணிக்கு குயின்ஸ்லாந்தின் மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரலை செய்கிறது.
இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலிய அணி தொடரை இழக்க நேரிடும். அந்த அணி கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளில் 6-ல் தோல்விகளை சந்தித்துள்ளது. இதில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளை மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கண்டறியக்கூடும். அதேவேளையில் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 5-வது முறையாக தொடரை வெல்லும்.
கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டாப் 6-ல் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றிருந்தனர். மேலும் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த 2 பந்து வீச்சாளர்களும் அங்கம் வகித்திருந்தனர். எனினும் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்க அணியும் வீரர்கள் மாற்றத்துக்கான கட்டத்தில் இருந்த போதிலும் பேட்டிங்கில் வலுவான இலக்கை கொடுத்தது. டாப் 4 பேட்ஸ்மேன்கள் அற்புதமாக செயல்பட்டனர். எனினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அறிமுக வீரரான டெவால்ட் பிரேவிஸ் சிறப்பாக செயல்படத் தவறினர். இவர்கள் இன்றைய ஆட்டத்தில் உயர்மட்டை திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.
பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் லுங்கி நிகிடி, நத்த்ரே பர்கர் ஆகியோர் தொடக்க ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் கேசவ் மகராஜ் அபார செயல் திறனை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இன்றைய ஆட்டத்திலும் அவர், ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
1992-ம் ஆண்டுக்கு பிறகு… மெக்கே மைதானத்தில் கடைசியாக 1992-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த சமயத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. ஆனால் இந்த ஆட்டம் வெறும் 2 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக கைவிடப்பட்டது.
சுப்ராயன் பந்துவீச்சில் சர்ச்சை: தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான பிரனேலன் சுப்ராயன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலும் களமிறங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், சுப்ராயனின் பந்துவீசும் பாணி சர்ச்சைக்குரிய முறையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளதுதான். ஆஸ்திரேலிய தொடர் நிறைவடைந்ததும் பிரிஸ்பனில் சுப்ராயனின் பந்து வீச்சு சுயபரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இன்றைய ஆட்டத்தில் சுப்ராயனுக்கு பதிலாக செனுரன் முத்துசாமி சேர்க்கப்படக்கூடும்.